56 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
மனைவியுடன் கூடி மகிழ்ந்திருந்தான்; அப்பொழுது அவன் சொல்லியது போலப் பாடப்பட்டது. உண்மையும் நீதியும் உண்மை நிகழ்ச்சிகளையும், நீதிகளையும் விளக்கும் பாடல்கள் பலவற்றைக் குறுந்தொகையிலே காணலாம். அகத்திணைப் பாடல்களிலே இவைகளை இணைத்துப் பாடுவது பழந்தமிழ்ப் புலவர்களின் வழக்கம். துக்கம் உள்ளவர்களுக்குத் தூக்கம் வராது. கவலை யுள்ளவர்களுக்குக் கண்ணுறக்கம் எப்படி வரும்? கவலையற்றவர்கள் தாம் அமைதியாக அயர்ந்து தூங்க முடியும். இந்த உண்மையைக் கூறுகிறது ஒரு குறுந்தொகைப் பாட்டு. பிரிந்து சென்ற காதலனை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் சொல்லுவது போலப் பாடப்பட்ட பாட்டு அது. ‘‘நள் என்னும் ஓசையுடன் இருந்தது நடு இரவு. எல்லா மக்களும் பேச்சடங்கி நன்றாக உறங்கிவிட்டனர். பெரிய உலகில் உள்ள மக்கள் அனைவருமே வெறுப்பின்றி நன்றாக உறங்குகின்றனர். ஓ! நான்மட்டுந்தான் இன்னும் உறங்காமலிருக்கின்றனே். நள் என்று அன்றே யாமம்: சொல் அவிந்து இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்; ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’’. (பா. 6) பொருளிலே ஆசைகொண்டவர்கள் வேறு எதனாலும் இன்பம் அடையமாட்டார்கள். செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைத்துப் பார்ப்பதிலேயே பரமாநந்தம் அடைவார்கள். பொருள் சேர்க்க அவர்கள் அல்லும் பகலும் அலைந்து திரிவார்கள். பொருளாசை பிடித்தவர்களின் வாழ்க்கையை உற்று நோக்குவார்கள் இவ்வுண்மை புலப்படும். |