‘‘செல்வத்திலே ஆசைகொண்டு அதைத் தேடப் புறப்பட்டுப் போனவர்கள், எல்லா இன்பங்களையும் அனுபவிக்கக் கூடிய இளமைப்பருவம் வீணாகக் கழிகின்றதே என்று கூடக் கவலைப்படமாட்டார்கள். இளமைபாரார் வளம் நசைஇச் சென்றோர்’’ (பா. 126) செல்வமுடையவனே இவ்வுலகில் எல்லா இன்பங்களையும் எய்த முடியும். இல்லாதவனுக்கு இவ்வுலகில் இன்பமில்லை. இல்லாதவன் இன்பத்தையடைய விரும்புவதனால் பயனும் இல்லை. அவன் விருப்பம் நிறைவேறாது. அவ் விருப்பம் அவனுக்குத் துன்பத்தைத்தான் உண்டாக்கும். ‘‘பொருளில்லாத வறியவன் இன்பத்தை அடைய ஆசைப்பட்டதைப் போல, ஆகாத காரியத்திலே ஆசை வைத்தாய் மனமே. இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே’’ (கா. 120) ‘‘பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பமும், தாமே அனுபவித்து மகிழும் இன்பமும் செல்வமற்றவர்களுக்கு இல்லை. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல். ’’ (பா. 63) காரணப் பெயர் பெயர்கள் காரணப் பெயர், இடுகுறிப்பெயர் என்று இரண்டு வகைப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் ஏற்பட்ட பெயர் காரணப் பெயர். காரணமில்லாமல் வைக்கப்பட்ட பெயர் இடுகுறிப் பெயர். சங்ககாலத் தமிழர்களிடம் இந்த இரண்டு வழக்கங்களும் இருந்தன. பாட்டனார் பெயரை மக்களுக்கு வைத்து வழங்கினர்: தெய்வங்களின் பெயர்களையும் மக்களுக்கு வைத்தனர். இவைகள் இடுகுறிப் பெயர்கள். |