பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்59

இவ்வாறு பல பெயர்கள் குறுந்தொகையிலும் மற்றும் பல சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும்

தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கும் தலைவி ‘‘இப்பிறப்பில் அவன் அன்பு கிடைக்காவிட்டாலும் மறு பிறப்பிலாவது அவனைக் கணவனாக அடைவேன்’’ என்று வேண்டிக் கொள்ளுவாள்.

பழைய மரத்திலே தெய்வம் வாழும். அது பயப்படத் தகுந்த தெய்வம்; கொடியோரைத் துன்புறுத்தும்; என்று நம்பினார்.

கொல்லிமலையிலே பயங்கரமான பெரிய கண்களையுடைய தெய்வம் உண்டு. அம் மலையின் மேற்குப் பாகத்திலே வணங்குவோர்க்கு நன்மை தரும். கொல்லிப் பாவை யென்னும் தெய்வமும் உண்டு என்று நம்பினர்.

செல்வர்கள் தங்கள் குழந்தைகளின் கால்களிலே, தவளை வாயைப்போல் காணப்படும் பொன்னாற் செய்த கிண்கிணிகளைப் போட்டிருப்பார்கள்.

அறிவுடையவர்கள் பொய்ச் சாட்சி சொல்லமாட்டார்கள்.

மக்கள் காடுகாள் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர். அது சூலத்தைக் கையிலே வைத்திருக்கும் பெண் தெய்வம். சூலி என்ற பெயரும் அதற்குண்டு. அத்தெய்வத்தை வேண்டிக்கொள்ளுவோர் கையிலே நூலால் காப்பு கட்டிக் கொள்ளுவார்கள்.

கூரையின் மேலிருந்து காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பினர்.

நோய் தீரத் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள்; அதற்குப் பூசை போடுவார்கள். பெண்களைப் பேய் பிடிப்பதுண்டு என்று நம்பினார்.