பக்கம் எண் :

60எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

குறக்குடிப் பெண்கள் குறி சொல்லுவார்கள். பெண்கள் உலக்கையால் தினையைக் குற்றும்போது பிறரைப் பழித்துப் பாடிக்கொண்டே குற்றுவார்கள்.

குழந்தைகள் சிறு தேர் (வண்டிகள்) இழுத்து விளையாடுவார்கள்.

பெண்கள் துணங்கைக் கூத்தென்னும் ஒருவகைக் கூத்தாடி மகி்ழ்வார்கள்.

சிறு குழந்தைகளுக்குப் புலிப்பல்லால் செய்த தாலியை நகையாகப் போடுவார்கள்.

சிறு பெண்கள் மணல் வீடு கட்டி விளையாடுவார்கள்.

துணிக்குக் கஞ்சி போடும் வழக்கம் பண்டைக்காலத்திலும் உண்டு.

இவ்வுலகில் அறஞ் செய்யாதவர்க்கு இறந்த பின் நல்ல கதியில்லையென்று நம்பினர்.

இவைபோன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்தன; இவற்றைக் குறுந்தொகைப் பாடல்களால் அறியலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வளமும் புகழும் பெற்றிருந்த நகரங்கள்; வறியோர்க்கு உதவி செய்து புகழ் பெற்ற வள்ளல்களின் பெயர்கள்; ஆற்றலிற் சிறந்த அரசர்களின் பெயர்கள்; ஆகியவைகளையும் இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழர்களின் வாழ்க்கைச் சிறப்பையும், சில சரித்திரக் குறிப்புக்களையும் தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் துணை செய்யும்.