4. நற்றிணை நூல் வரலாறு நல்ல ஒழுக்கமாகிய அகத்திணையைப் பற்றிக் கூறும் நூல் நற்றிணை. நல்+திணை=நற்றிணை. திணை-ஒழுக்கம். நற்றிணை-நல்லொழுக்கம். எட்டுத்தொகையைச் சேர்ந்த அகத்திணை நூல்களிலே இது ஒரு சிறந்த நூல். நற்றிணை என்ற பெயரைக் கொண்டே இதன் சிறப்பை உணரலாம். திணை என்ற பெயரிலே தமிழிலே பல நூல்கள் உண்டு. அவைகள் திணைமாலை நூற்றைம்பது; திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை அறுபது (கைந்நிலை), ஐந்திணை எழுபது என்பவை. இந்த ஐந்தும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்தவை. நற்றிணை ஒரு தொகை நூல். ஒருவரால் பாடப்பட்டதன்று; பலரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதி. குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. குறுந்தொகையைப் போலவே இந்நூலிலும் எல்லாத் திணைப்பாடல்களும் கலந்து கிடக்கின்றன. இந்நூலில் நானூறு பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்று. இது பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. நானூறு பாடல்களிலே ஆசிரியர்கள் பெயர் தெரியாத பாடல்கள் ஐம்பத்தொன்று. 175 புலவர்களின் |