பக்கம் எண் :

62எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பாடல்கள் இந்நூலிலே அடங்கியிருக்கின்றன. நற்றிணையில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரையில் உள்ளவை.

இந்த நானூறு பாடல்களையும் ஒன்றாகத் தொகுத்தவன் ஓர் பாண்டிய மன்னன். ‘‘பன்னாடு தந்த மாறன்வழுதி’’ என்பது அவன் பெயர். அவனைப்பற்றிய வேறு வரலாறுகள் விளங்கவில்லை.

இந்நூலின் தொண்ணூற்றெட்டாவது பாடல் உக்கிரப் பெருவழுதி என்பவனால் பாடப்பட்டது. தொண்ணூற்றேழு, முந்நூற்றொன்று ஆகிய இரண்டு பாடல்கள் மாறன்வழுதி என்பவனால் பாடப்பட்டவை. இந்த உக்கிரப் பெருவழுதியும், மாறன்வழுதியும் ஒருவனா, அல்லது வெவ்வேறா என்பது ஆராயத்தக்கது. உக்கிரப் பெருவழுதி என்பவன் கடைச்சங்க காலத்திலிருந்தவன் என்று கூறப்படும் பாண்டிய மன்னன்.

ஐவகை நிலங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களின் சிறந்த ஒழுக்கங்கள் பலவற்றை இந்நூலிலே காணலாம். தமிழர்களின் சிறந்த பண்பாடு, தமிழ்ப் பெண்களின் கற்பொழுக்கம், ஆண்களின் அசையாத அன்பு, தமிழர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கை, இவைகள் பற்றி இந்நூல் விளக்கமாகக் கூறும். தமிழ்ப் புலவர்களின் சிறந்த இயற்கையான கற்பனைகளையும், கவியின்பத்தையும் இந்நூலிலே கண்டு களிக்கலாம்.

உயிர்கள் மேல் இரக்கம்

எல்லா உயிர்களிடமும் இரக்கங்காட்டுவது பண்டைத் தமிழர்களின் பரம்பரைக் குணம்; காரணமில்லாமல் எவ்வுயிர்க்கும் இன்னலிழைக்க மாட்டார்கள்; சிற்றுயிர்களுக்குக்கூடச் சிறுமை புரியமாட்டார்கள். இந்த உண்மையை ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கிக் காட்டுகிறது ஒரு பாட்டு.