ஒரு தலைவன் தேரின்மேல் ஏறிக்கொண்டு வருகின்றான். அத் தேர் கடற்கரையின் வழியே வந்துகொண்டிருக்கின்றது. கடற்கரையிலே நண்டுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. தேரோட்டிவரும் பாகன், தேர்ச் சக்கரத்திலே அந்த நண்டுகள் அகப்பட்டு நசுங்காதபடி கவனத்துடன் தேரை ஓட்டிக்கொண்டு வருகின்றான். இச்சமயத்திலே அவனுடைய செய்கைக்கு உதவியாக நிலவும் தோன்றியது. இந்நிகழ்ச்சியின் வழியாகத் தமிழர்களின் உயிர்க்கருணையை வெளியிடுகிறது ஒரு பாட்டு. ‘‘அலைகள் மோதுகின்ற-ஒளிபொருந்திய மணல் நிறைந்த-கடற்கரை; அந்தக் கரையிலே சக்கரங்களின் அடியிலே நண்டுகள் அகப்பட்டுக்கொள்ளாதபடி பாதுகாத்துக் கொண்டே, தேர்ப்பாகன் குதிரைகளின் வாரைப் பிடித்து இழுத்துக் கவனத்துடன் தேரை ஓட்டினான். இச்சயமத்தில் அக்கடற்கரையில் நிலவும் புறப்பட்டது. புணரி பொருத பூமணல் அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர நிலவு விரிந்தன்றால் கானலானே’’ (பா. 11) துன்பம் களைதல் தமிழர்கள் பிறர்படும் துன்பத்தைக் கண்டால் பொறுக்க மாட்டார்கள்; உடனே அவர்களுக்கு உதவி செய்ய முந்துவர். இதுவே சிறந்த மனிதத்தன்மை. இத்தன்மை ஒவ்வொரு மனிதரிடமும் குடிகொண்டிருந்தால் மனித சமுதாயத்தில் துன்பமே தலைகாட்டாது; ஒற்றுமையும் இன்பமும் ஒன்றாகக் கைகோத்து நடனமாடும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இத்தகைய அருங்குணம் மக்களுக்கு வேண்டும் என்பதை அறிவுறுத்தும் அரிய கவிகள் பலவற்றை இயற்றியிருக்கின்றனர். |