இந்தச் சிறந்த பண்புதான் தமிழர்களை அடிமையாக்கி விட்டது என்று கூறுவோரும் உண்டு. பகைவர்களை விருந்தினர்களாக வரவேற்கும் முறை தமிழர்களிடம் இருந்ததில்லை. தமிழர்கள் பகைவர்களுக்கு ஒருபொழுதும் தலை வணங்க மாட்டார்கள்; அவர்களை அடித்து விரட்டுவார்கள். உதவி தேடிவந்தவர்களையே விருந்தினராக ஏற்று உள்ளன்புடன் உபசரிப்பார்கள். வள்ளல்கள் வரலாறுகளிலும், மன்னர்கள் வரலாறுகளிலும் இவ்வுண்மையைக் காணலாம். ஆகையால் விருந்தோம்பும் குணந்தான் தமிழரை அடிமையாக்கிற்று என்று சொல்லுவது பொருந்தாது. ஒரு இனத்தாரின் சிறந்த பண்பாட்டை விளக்குவது அவர்களுடைய விருந்தோம்பும் குணமேயாகும். நற்றிணையிலே, பல பாடல்களிலே தமிழர்களிலே இச் சிறந்த பண்பாட்டைக் காணலாம். எனக்கும் என் கணவனுக்கும் ஊடலே உண்டாவதில்லை என்று ஒரு பெண் சொல்லுகிறாள். ஊடல் உண்டாகாமைக்கு அவள் கூறும் காரணந்தான் வியப்பைத் தருகின்றது. ‘‘என்னுடைய நல்ல வீட்டிலே ஏராளமான விருந்தினர்கள் எப்பொழுதும் தங்கியிருக்கின்றனர். அவர்களை உபசரிப்பதிலேயே எங்கள் நேரம் கழிகின்றது; ஓய்வேயில்லை; ஆகையால் ஊடல் தோன்றுவதற்கே இடமில்லை. நன்மனை நனிவிருந்து அயரும்; கைதூவின்மையின், எய்தாம் ஆறே’’. (பா. 280) கணவனுடன் ஊடியிருக்கின்றாள் ஒரு மனைவி. அவள் அடுக்களையிலே சமைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் முகத்திலே மகிழ்ச்சியில்லை; சினத்தால் சிவந்திருக்கின்றது. ‘‘இப்பொழுது என் வீட்டிற்கு விருந்தினர்கள் வருக. விருந்தினரைக் கண்டால் இவளுடைய சிவந்த முகம் மாறும். |