பக்கம் எண் :

66எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

முகத்திலே புன்சிரிப்பு காணப்படும்; நாமும் அம்முகத்தைக் கண்டு மகிழலாம். இவளுடைய ஊடலும் ஓடி மறைந்துவிடும்’’ என்று ஏங்குகின்றான் கணவன். இந்நிகழ்ச்சியைக் குறிக்கின்றது மற்றொரு பாடல்.

‘‘புகையிலே மூழ்கி விழிக்கின்ற கண்களையுடையவள். அழகுடன் பிறை போன்ற நெற்றியிலே தோன்றிய சிறிய பல வியர்வைத் துளிகளை அழகிய புடவையின் முன்தானையால் துடைத்துக் கொண்டாள். நம்முடன் கோபித்துக் கொண்டு சமையற்கட்டிலே சமைத்துக் கொண்டிருக்கின்றாள். அழகிய சிறந்த குணங்களையுடைய எனது மனைவியின் நிலைமையிது. இந்தச் சமயத்தில் எமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வருவார்களாக. அப்பொழுதுதான் அவளுடைய முகத்தின் சிவப்பு மாறும். சிறிய முட்கள் போன்ற பற்கள் தோன்றும்படி புன்சிரிப்பு காட்டும் அவள் முகத்தைக் காணலாம்.

புகை யுண்டு அமர்த்த கண்ணள், தகைபெற
பிறை நுதற் பொறித்த சிறுநுண் பல்வியர்
அம்துகில் தலையின் துடையினள், நப்புலந்து
அட்டிலோளே; அம்மா அரிவை
எமக்கே வருக! தில்விருந்தே; சிவப்புஆன்று,
சிறிய முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே’’                             (பா. 120)

இதனால் விருந்தினரைக் கண்டால் முகமலர்ந்து வரவேறகும் தமிழர்களின் சிறந்த பண்பைக் காணலாம்.

நாகரிகம்

நாகரிகம் என்ற சொல்லுக்குத் தமிழிலே ஒரு தனிச் சிறப்புண்டு. நாகரிகம் இப்பொழுது ‘‘நாகரீகம்’’ என்று நீண்டுவிட்டது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற பொருளில் இச்சொல் இப்பொழுது வழங்குகின்றது.