நகரங்களில் தோன்றி வளரும் நடையுடை பாவனைகளை நாகரீகம் என்ற சொல்லால் இப்பொழுது குறிக்கின்றனர். நகர ரீதியாகத் தோன்றியது நாகரீகம் என்று கூறிவிடுகின்றனர். பண்டை இலக்கியங்களிலே நாகரிகம்-கண்ணோட்டம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கின்றது. கண்ணோட்டம் - இரக்கமுடைமை; அன்பின் மிகுதியால் தோன்றும் இரக்கம்; தாட்சண்யம்; கருணை. ‘‘முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர். (பா. 355) மிகுந்த கண்ணோட்டமுடையவர்கள், பழைமையான நட்பு கொண்டவர்கள் கொடுத்தாலுங்கூட அவர்கள் கொடுக்கும் நஞ்சையும் உண்பார்கள்’’. இதில் நாகரிகர் என்ற சொல் கண்ணோட்டம் உடையவர்கள்; கருணையுள்ளவர்கள்; இரக்கமுடையவர்கள்; தாட்சண்யம் உள்ளவர்கள்; என்ற பொருளில் வந்திருப்பதைக் காணலாம். நட்பு பாராட்டுதல், இரக்கங் காட்டுதல், பொறுமை காட்டுதல், அன்பு காட்டுதல், குற்றங்களைப் பொறுத்து மன்னித்தல், இவை போன்ற சிறந்த பொருளைக் கொண்டதே இந்த நாகரிகம் என்ற சொல். இரக்கமுடையவர்களிடந்தான் இச்சிறந்த தன்மைகள் காணப்படும். பண்டைத் தமிழர்கள் இத்தகைய நாகரிகமுள்ளவர்களாக வாழ்ந்தனர். ‘‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். விரும்பத்தக்க கண்ணோட்டத்தை வேண்டுகிறவர்கள். நட்பாயினார் தமது உணவிலே நஞ்சை ஊற்றக் கண்டும், அதனை வெறுக்காமல் உண்டு, அவரோடு நட்பாகவே யிருப்பர்”. |