பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்73

கடுந்தேர்ச் செல்வர்க் காதல் மகனே;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ;
புலவு நாறுதும்; செல நின்றீமோ;
பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ! அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே’’.                                (பா. 45)

இல்லறத்திலே என்றும், இன்பமும் ஒற்றுமையும் இணைந்திருக்கக் கூடிய பொருத்தமுள்ள திருமணம் இன்னதுதான் என்று இப்பாடல் குறிப்பதைக் காணலாம். குல மகளிரிடம் ஒழுக்கக் கேடுகள் உண்டாவதற்குக் காரணம் பொருந்தா மணமேயாகும். காதல் என்ற பெயரால் காமவெறிகொண்டு பொருந்தா மணம் செய்துகொள்வதனால் தான் விவாக முறிவுகளும் ஏற்படுகின்றன.

பரத்தையர் இயல்பு

பரத்தையர்-கணிகையர்-விலைமாதர்கள் என்பவர்களோடு கூடிக்குலவும் பழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது உண்மைதான். ஆயினும் அதனை அறிஞர்களும், குலமகளிரும் ஆதரிக்கவில்லை. ஆகாத செயல் என்றே வெறுத்து வந்தனர். பரத்தையர் கூட்டுறவால் ஏற்படும் பழியையும் அவ்வப்போது எடுத்துக்காட்டி அறிவுறுத்தி வந்தனர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

இவ்வுண்மையை அறிய ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம். பரத்தை வீட்டிலே தங்கிவிட்டு வந்தான் ஒரு தலைவன். அவனைப் பார்த்துத் தலைவியின் தோழி புத்திமதி சொல்லுகின்றாள். இம் முறையில் அமைந்திருக்கின்றது ஒரு பாடல்.

‘‘புதிய வருவாய்களையுடைய ஊரின் தலைவனே! உன்னுடைய-சிறந்த ஆபரணங்களையணிந்த-காதல் மகளிரை