பக்கம் எண் :

74எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

எமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, நீ அவர்களைத் தழுவிக்கொண்டு வாழ்ந்தாலும், பிறர் செல்வத்தையே பெரிதாக விரும்பும் அவர்களுடைய அற்ப மனத்திலே உண்மைக் காதல் பிறப்பது அரிது; அவர்களும், பசுமையான வளையல்களையணிந்த-உனது மனைவிமார்களுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்து. குழந்தைகளைப் பெற்றெடுத்து நன்மை நிறைந்த கற்புடன்-எம்மைப் போன்ற கற்புடை மகளிர் என்ற பெருமையுடன்-வாழ்தல் அதைக் காட்டினும் அரிதாகும்.

யாணர் ஊர; நின்மாண் இழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும், அவர்தம்
புன்மனத்து உண்மையோ அரிதே; அவரும்
பைந்தொடி மகளிரொடு, சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடுஆதல் அதனினும் அரிதே’’                              (பா. 330)

இப்பாடலில் அமைந்திருக்கும் சிறந்த கருத்து பாராட்டற்குரியது. ‘‘விலைமகளிரிடம் உண்மையான காதலை எதிர்பார்க்க முடியாது; அவர்கள் குலமகளிருடன் கூடி ஒத்து வாழமாட்டார்கள்; ஒத்து வாழ்ந்தாலும் குலமகளிரைப் போல் குழந்தைகளைப் பெற்றுக் கற்புடன் வாழமாட்டார்கள்; ஆதலால் அவர்கள் தொடர்பு வேண்டாம்’’ இத்தகைய உயர்ந்த உபதேசம் இப்பாடலில் அமைந்திருக்கின்றது.

வரலாறுகள்

பழைய வரலாறுகள் பல நற்றிணைப் பாடல்களிலே காணப்படுகின்றன. அகத்திணைப் பாடல்களிலே, பழைய நகரங்களையும், ஊர்களையும், மலைகளையும், வீரர்களையும் உவமையாக அமைத்துப் பாடுவது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் வழக்கம். அகத்திணை நூல்கள் பலவற்றிலும் இதைக் காணலாம்.