பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்75

‘‘ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா உண்ணி                              (பா. 216)

பகைவன் செய்த கொடுமை உள்ளத்தைத் துன்புறுத்த, தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட திருமாவுண்ணி. ’’

இது கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போலக் காணப்படுகின்றது. நற்றிணைப் பாடல்கள் சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டவை. ஆதலால் இது சிலப்பதிகாரக் கண்ணகியைக் குறிப்பதாகாது. கண்ணகி வரலாறு போன்ற ஒரு கதை சிலப்பதிகார காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் வழங்கியிருந்தது என்பதையே இது குறிக்கின்றது.

இப்பாடல் சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றியது; நற்றிணையில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்; என்று சொல்வோரும் உண்டு.

மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஓரி என்பவனைக் கொன்றான். (பா. 320)

மேகத்தைப் போன்ற சிறந்த வள்ளலாகிய ஓரி என்னும் வள்ளலுக்குச் சொந்தமானது கொல்லிமலை. (பா. 265)

கொல்லிமலையிலே அருவியுணடு; சிறந்த பல செல்வங்கள் உண்டு-தெய்வத்தால் காக்கப்படுவது அம்மலை. அந்தமலையின் மேற்குப் பகுதியிலே எப்பொழுதும் அழியாமல் வாழ்கின்ற கொல்லிப் பாவை என்னும் தெய்வம் உண்டு. (பா. 201)

ஆய் அண்டிரன் என்னும் வள்ளல், தன்னிடம் இரவலர்கள் எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் யானைகளையும், செல்வங்களையும் பரிசளிப்பான். இதற்காகவே எண்ணற்ற யானைகளைச் சேர்த்து வைத்திருப்பான். (பா. 237)