நீதிமொழிகள் வயதேறியவர்கள் வாலிபராகலாம்; முதிர்ந்தோர் இளைஞராகலாம்; கிழவி குமரியாகலாம்; இதற்கு மருந்துண்டு; காயகற்பம் உண்டு; என்று இன்றும் சிலர் நம்புகின்றனர். இதற்காக மருந்தும் செய்து விற்பனை செய்கின்றனர். இம்மருந்துகள் பற்றி விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இவ்விளம்பரங்களைக் கண்டு பலர் ஏமாறுகின்றனர். முதியவர்கள் இளமையடைய முடியாது; வாழ்நாள் இவ்வளவுதான் என்று எந்தச் சோதிடத்தாலும் அறியமுடியாது; என்ற உண்மையை உரைக்கின்றது ஒரு செய்யுள். ‘‘முதிர்ந்தவர்கள் எவ்வளவு வருந்தி முயன்றாலும் மீண்டும் இளமைப் பருவத்தை அடையமாட்டார்கள்; வாழ்நாளின் வகையை இவ்வளவு நாள்தான் என்று அறிந்து கூறுகின்றவர்களும் இல்லை. முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை’’ (பா. 314) ‘‘ஒவ்வொரு நாளும்இளமைப் பருவமும், இளமைப் பருவத்தால் அடையும் இன்பமும் விரைவாகக் கழிந்து கொண்டேயிருக்கின்றன. எய்த அம்பின் நிழலைப்போல் அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வைகல் தோறும் இளமையும் இன்பமும் எய்கணை நிழலிற் கழியும்’’ (பா. 46) இதனால் இன்பமும், இளமையும் நிலைத்தவையல்ல என்பதைக் காணலாம். அவை நிலைத்தவை என்று எண்ணியிருப்போர்க்குக் கூறிய அறிவுரை இது. |