78 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பழக்க வழக்கங்கள் பண்டைத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் பல நற்றிணைப் பாடல்களிலே காணப்படுகின்றன. ‘‘தை மாதத்திலே குளிர்ந்த நீர் நிறைந்த குளங்களிலே பெண்கள் நீராடுவார்கள். (இது பொங்கல் நாளைக் குறித்ததாக இருக்கலாம். ) தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள்’’. (பா. 80) பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்பார்கள். பிள்ளைகளுக்குப் பாட்டன் பெயரை வைப்பது பண்டைத் தமிழர்களின் வழக்கமாகும். தன் மகள் கள்ளக்காதலில் ஈடுபட்டிருப்பதை அன்னை அறிந்தால் கடுஞ்சினம் கொள்வாள்; அவளைக் கோலால் அடித்துக் கண்டிப்பாள். தலைமகளின் காதல் நோயை அறியாத அன்னை அவளுக்கு உண்மையாகவே ஏதோ நோய் வந்துவிட்டதாக நம்புவாள். அந்நோய் நீங்க முருகனுக்குப் பூசைபோடுவாள். அப்பொழுது வெறியாடும் வேலன் முன்னிலையில், தலைவியின் கூந்தலில் உள்ள மலரை எடுத்துப் போட்டுத் தலைமகளின் நோய் தீரவேண்டும் என்று வேண்டிக் கொள்வாள். மக்கள்மேல் தெய்வ ஆவேசம் வந்து ஆடுவது உண்டு. இதற்கே வெறியாட்டு என்று பெயர். பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு என்ற நம்பிக்கை பழந்தமிழர்களிடம் இருந்தது. |