5. அகநானூறு நூல் வரலாறு அகப் பொருளைப் பற்றிக் கூறுவது; நானூறு பாடல்களைக் கொண்டது; ஆதலால் அகநானூறு என்று பெயர் பெற்றது. இந்நூலில் நானூறு பாடல்களும். பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் கூடி நானூற்றொரு பாடல்கள் இருக்கின்றன. அகநானூற்றுப் பாடல்கள் ஐந்திணை யொழுக்கங்களை விரிவாக எடுத்து விளம்புகின்றன. இச்சிறப்புக் கருதியே அகம் என்ற பெயரை-அகப்பொருள் என்று பொருள்படும் பொதுப் பெயரை-இந்த நானூறு பாடல்களுடன் இணைத்தனர்; அகநானூறு என்று சிறப்பாகப் பெயரிட்டனர். இந்த நூலுக்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகநானூறாகிய நெடுந்தொகையின் பாடல்கள் பதின்மூன்று அடிகளுக்குக் குறையாமலும், முப்பத்தொரு அடிகளுக்கு மேற்படாமலும் உள்ளவை. அகநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்தைந்து புலவர்களால் பாடப்பட்டவை. இந்த நானூறு பாடல்களிலே இருநூறு பாடல்கள் பாலைத்திணை பற்றியவை. எண்பது பாடல்கள் குறிஞ்சித்திணை பற்றியவை. நாற்பது பாடல்கள் மருதத்திணை பற்றியவை. மற்றொரு நாற்பது பாடல்கள் முல்லைத்திணை பற்றியவை. மற்றொரு நாற்பது பாடல்கள் நெய்தல் திணை பற்றியவை. |