நூலின் அமைப்பு இந்நூலின் தொகுப்பிலே ஒரு அழகுண்டு; ஒவ்வொரு பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரித்துப் பார்த்தால்தான் அவ்வழகு தெரியும். ஒரு பத்துப் பாடல்களை எடுத்துக் கொண்டால் ஒற்றை எண்ணுள்ள பாடல்கள் எல்லாம் பாலைத்திணை; 1. 3. 5. 7. 9. ஆகிய எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் பாலைத்திணை பற்றியவை. இரண்டாவது பாட்டும், எட்டாவது பாட்டும் குறிஞ்சித்திணை பற்றியவை. நான்காவது பாட்டு முல்லைத்திணை. ஆறாவது பாட்டு மருதத்திணை. பத்தாவது பாட்டு நெய்தல் திணை. இந்த நூல் மூன்று பகுதியாக அமைந்திருக்கின்றது. முதற்பகுதி களிற்றியானை நிரை; இரண்டாம் பகுதி மணிமிடை பவளம்; மூன்றாம் பகுதி நித்திலக்கோவை. இப்பிரிவு பாட்டின் பொருள் கருதிப் பிரிக்கப்படவில்லை. செய்யுளின் நடை நயங்கருதி இப்படிப் பிரிக்கப் பட்டிருக்கலாம். இந்த நடை நயத்தின் வேறுபாடுகளை நம்மால் அறியமுடியவில்லை. நுண்மாண் நுழைபுல முடையோரே நுனித்தறியக்கூடும். களிற்றியானை நிரை; ஆண் யானை வரிசை. ஆண் யானைகளைப்போலக் கம்பீரமாக அசைந்து செல்லும் பாடல்களுக்கு இப்பெயரை அமைத்திருக்கலாம். மணிமிடை பவளம்; மாணிக்கத்தோடு தொடுக்கப்பட்ட பவளம். மாணிக்கம போன்ற சொற்களும் பவளம் போன்ற மொழிகளும் கலந்த பாடல்களை மணிமிடை பவளம் என்ற வரிசையிலே தொகுத்திருக்கலாம். நித்திலக்கோவை; முத்துமாலை, முத்துப்போன்ற ஒரே வகையான சொற்களால் அமைந்த பாடல்களை நித்திலக்கோவை என்ற வரிசையிலே சேர்த்திருக்கலாம். |