மக்களின் ஒழுக்கங்களைப் படிப்போர் உள்ளத்திலே பதியும் படி சுவையுடன் சொல்லுவதோடு நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டின் பழைய வரலாறுகள் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழர் வரலாறுகளை அறிவதற்கு அவைகள் பெரிதும் உதவும். மூவேந்தர்களின் வாழ்க்கை வரலாறுகள்; அவர்களுடைய வீரச் செயல்கள்; அவர்களுடைய படைத்தலைவர்களின் பெருமைகள்; இவைகள் பல பாடல்களிலே காணப் படுகின்றன. தமிழ்நாட்டிலே வாழ்ந்த வள்ளல்களிலே சிலருடைய பெயர்கள்; அவர்களுடைய பெருமைகள்; தமிழ் நாட்டிலே வாழ்ந்த வீரர்களிலே சிலருடைய பெயர்கள்; அவர்கள் புரிந்த போர்கள்; முதலியன பல பாடல்களிலே காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்திலே சிறந்திருந்த நகரங்கள், ஊர்கள், கடல் துறைமுகங்கள் ஆகியவை பல பாடல்களிலே காணப்படுகின்றன; பல ஆறுகளையும், மலைகளையும் காணலாம். இவைகள் எல்லாம் வரலாறுகளாக நேரடியாகக் கூறப்படவில்லை. உவமானங்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. உவமை கூறும் முறையிலே தமிழர்களின் வீரம், கொடை முதலியவற்றைக் குறித்திருக்கின்றனர்; சிறந்த நகரங்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் ஆகியவைகளையும் குறப்பிட்டிருக்கின்றனர். இது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காட்டுவதோடு. அவர்கள் தமிழகத்தின்மீது கொண்டிருந்த பேரன்பையும் விளக்கும். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களிலேயும் இம் முறையிலே உவமைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆயினும் அகநானூற்றில் கூறப்படும் |