பக்கம் எண் :

86எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி
நாணி நின்றெனெம் ஆகப், பேணி
ஐவகை வகுத்த கூந்தல், ஆய்நுதல்
மையீர் ஓதி மடவீர்! நும்வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன்; பையெனப்
பரிமுடுகு தவிர்த்ததேரன் எதிர் மறுத்து,
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்றஅக்குன்று கிழவோனே’’                           (பா. 48)

இதுவே அப்பாடலாகும். தலைவனும் தலைவியும் சந்தித்ததைப் பற்றித் தோழி செவிலித்தாய்க்குக் கூறியதுபோலப் பாடப்பட்டது இப்பாட்டு.

கற்பு மணம்

இப்படிக் களவு மணம் புரிந்துகொண்ட தம்பதிகள் விரைவில் கற்பு மணம் செய்துகொள்ளுவார்கள். தலைவன் பெண்ணின் பெற்றோரின் சம்மதம் பெற்று அவளை மணந்துகொள்வான். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தலைவன் அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான். பின்பு தலைவனும் தலைவியும் வெளிப்படையாக வாழ்ந்து இல்லறம் நடத்துவர். களவின்றிக் காதலனும் காதலியும் வெளிப்படையாக ஒன்று சேர்ந்து வாழ்வதே கற்பு மணமாகும்.

ஒரு தலைவனும், தலைவியும் களவு மண வாழ்க்கையிலே காலங்கடத்துகின்றனர். இச்செய்தியை ஊரார் அல்லது தலைவியின் பெற்றோர்-உணர்வதற்கு முன்பே கற்புமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தலைவியின் ஆவல். ஆனால் தலைவன் தவணை சொல்லிக் காலங்கடத்திக் கொண்டே போனான். அப்பொழுது தோழி. ஊரார் அறிய மணம் புரிந்துகொள்ளும்படி தலைவனிடம் வலியுறுத்துகின்றாள்: இம் முறையில் அமைந்துள்ளது ஒரு பாட்டு.