572. இந்தவோர் மலையை யிவ்விட மிருந்தே யகன்றுசெல் லுகவென வுரைக்க அந்தவும் முரைபோ லவ்விட மிருந்தே யகன்றுசெல் லுமேயம் மலையே எந்தவோர் விதமு முங்களாற் செயவே முடியா தேதுமில் நிசமே இந்தவோர் வகைப்பேய் நீங்கா தெதிலும் உபவசஞ் செபத்தா லலாதே. 74. பாடுகள் முன்னறிவித்தல்.II.மத். 17 : 22 - 23; மாற். 9 : 30 - 32; லூக். 9 : 43 - 46. 573. அருட்குரு பரனோ அதுகல மிருந்தே ஆறிரு சீடருந் தொடர அருகுநா டதுவாங் சலிலியின் வழியே தமதரு ளூழியம் நடத்தி வரும்வழி யினிலே யினிவருந் தமது மரணம் பாடுகள் குறித்தே மறுதரந் தொடுத்தே மனதுவந் துரைத்தார் சிசியரு ணர்ந்ததை யறிய. 574. மனுடமைந் தனுமே மனுடரின் சரத்தில் ஒப்புக் கொடுக்கப் படுவார் மனுடரோ அவரைக் கொடிது வதைத்தே வன்கொலை புரிவரே யெனவும் மனுடகு மரனோ மரித்தவ ரிடம்நின் றுயிர்த்தெழு வார்நிசம் எனவும் இனமொடு தமது சிசியருக் குரைத்தே எச்சரிப் பருளி ரருளாய். 575. அவர்களோ பரணி னருளுரைக் கருத்தை யறிந்துகொள் ளவிலைத் தெளிவாய் அவருட அறிவுக் கதுமறைந் திருந்தே யரும்பொரு ளானதவ் விடயம் அவரிட மணுகி யதுவுரை குறித்தே வினவவே யஞ்சின ரவரே அவர்களோ தமக்குள் ளத்துய ரடைந்தே யடக்கிவைத் தனர்தம துளத்தில் 576. இவர்களிவ் வசனங் கேட்டுவி சனித்தும் எள்ளள வுணர்விலா திருந்தார் எவன்பெரி யவனோ என்றவர் தமக்குள் தர்க்கமி டவேதொடங் கினரே அவரவர் தமது மேன்மை குறித்துப் பேசியே யகந்தை கொண் டனரே அவர்முன் இசலி ஆண்டவர் புகன்ற திவ்யபோ தகம்அவ மதித்தனரே. 75. மீன்வாயிற் பணம். மத். 17 : 24 - 27. 577. ஆண்டவர் முடித்தே சுற்றியே பயணம் அடைந்தனர் கபர்நகூம் பதியே ஆண்டொன் றினிலும் சேக்கலி லரையாம் வரிவசூல் செயுஞ்சில மனுடர் ஆண்டவ ரிடத்திற் றண்டஅவ் வரியை யவருட அகத்தை யணுகி ஆண்டுநின் றிருந்த பீற்றரை யணுகி யவனிடங் கடினமா யுரைத்தார். |