43. உமக்கியான் என்செய வேண்டியதென் றுரைப்பீ ரேயென வினவினரே எமக்கொரே காரிய மேயவத்யம் இரங்கிய ளிப்பீர் நயனமென உமதுட வேண்டலுக் கேயிரங்கி யுமக்கியான் பார்வை யருளினேனே உமதவா வையேயான் பூர்த்திசெய்தேன் என்றவன் கண்களைத் தொட்டனரே. வேறு 44. தொட்டவுட னேதிறந்த இணையிமைமே துரிதமாய்த்தெ ளிந்தனவே சோடிவிழி இட்டமுடன் பார்க்கவுமே யாவையுமே எழில்விழியே யுற்றனவே கண்களுமே வட்டமிடுங் கூட்டமேவி யப்புறவே வளமிகவே தோத்திரித்தார் வான்பரனை இட்டமொடே யேசுபரன் சீரடிமுன் னிருவருமே வீழ்ந்தவரைத் தோத்திரித்தார். 45. காணாதே யந்தகராய்க் கத்தியுற்றோம் கட்டமுறு சீவியமே செய்துளேமே வாணாளே வீணிலேயாம் போக்கினோமே பாதைவழி யண்டைநின்றே பிச்சைகேட்டே நாணாதே பாதைநடு வேநடப்போம் நான்குபேர்ம திக்கவுமே வாழ்ந்திருப்போம் காணாதாங் காட்சியேகண் டேமகிழ்வோம் கர்த்தனையே யெத்தினமும் போற்றுவோமே. 46. எளிதிலெவர் தீங்கெலாமே நீங்கிவிட உலகிதிலே வந்துதித்த மேசியாநீர் இழிந்ததொரு சீவியத்திற் கத்தியுறு மெளியவரின் துன்பமேதீர் மேசியாநீர் இழிந்தசாப முற்றதொரு இப்புவியில் இறந்தவரை யேயெழுப்பு மேசியாநீர் எளியவரு மிழிந்தவரு மாமெக்கே மனமிரங்கியே கலிதீர்க்கும் மேசியாநீர். 47. இனியாங்க ளிம்மட்டுஞ் செய்துவரும் இழிந்ததொரு சீவியமே நாடுவதில் இனியாங்க ளெந்தநிலை வந்துறினும் எழிலுயர்வாஞ் சீவியமே செய்குவோமே இனியாங்க ளும்முடைய தொண்டரானோம் எதுதினமு மும்மையாம் பின்தொடர்வோம் இனியும்மால் வாழ்வடைய வேபலபேர் எவரையுமே யும்மிடங்கொண் டேவருவோம். |