76. வீசுவீர் வலப்புற மும்வலையை வேண்டிய மீன்படு மென்றுரைத்தார் வீசவே யதுவிதம் அவர்வலையே மீன்பட மாதிரள் வலையினிலே வீசிய வலையே யவரிழுக்கக் கூடிய தாயிலை மிகுகனமே பேசின னருளனே சிமியனிடம் கர்த்தரே யிப்பெரி யார்என்றான். 77. கேட்கவே யவர்பரன் கர்த்தரென சீடனே கேபா வெனுஞ்சிமியோன் மாட்டினன் தனதுட மேலுடையை மாவிரை வாய்க்குதித் தான்கடலுள் ஓட்டிவந் தவரா மற்றவரோ ஓடமே யகலா ததிலிருந்தே நீட்டியே யிழுத்தே கொண்டுவந்தார் மீனிறை வலையைக் கரையருகே. 78. கரையோ சிறிதே தூரமேதான் கரையோ நூறிரு முழத்தூரம் கரையினி லிறங்கச் சீடருமே கரையிலே கண்டனர் கரிநெருப்பும் கரிநெருப் பின்மேல் மீனிருக்கக் கண்டன ரப்பமு மவணிருக்க தெரிந்துமே கொணர்வீ ரிப்பொழுதில் பிடித்ததா மீன்களிற் சிலவென்றார். 79. ஏறினன் சிமியோன் படவினிலே யிழுந்தனன் வலையைக் கறையினிலே ஏறிய பெருமீன் வலையினிலே யிருநூற் றைம்பது மூன்று மேதான் பீறியே வலையோ கிழியவில்லை பேதுரு சேர்த்தன னதை மெதுவாய் வாறியே கொடுத்தான் மீன்களையே வந்துமே புசிப்பீர் என்றனரே. 80. அறிந்ததா லவர்பரன் கர்த்தரென ஆருமே வினவவே துணியவில்லை துரிதமாய்க் கொடுத்தன ரவர்களுக்கே அப்பத் துணிக்கை மீனையுமே மரித்தோ ரிடமிருந் தெழும்பிய பின் மன்னிய சிஷியருக் கருளியதாம் தரிசனங் களுக்குள் ளிதுமூன்றா மற்புத மொடுமருட் டரிசனமே. 81. சாப்பிட் டானபின் தற்பரனே தயவொடு நோக்கினர் பேதுருவை கூப்பிட் டவனை யோனாவின் குமரனா மாத்திரச் சீமோனே ஏற்பட் டவரென் சீடரிவர் எனதிடம் வைத்துள அன்பிலுமே மேற்பட் டென்மே லன்புளதோ உனக்கே விளம்பென் றேயுரைக்க. 82. அறிவீர் நீரதை யாண்டவரே ஆமுமை நேசிக் கிறேன்எனவே அரியதோ ரன்பரு ரைத்தனரென் னாட்டுக் குட்டிகள் மேய்ப்பாயே திரும்பவுந் தற்பரன் பேதுருவைச் சீராய்க் கேட்டனர் யோனாவின் அருமையா மைந்தனே சீமோனே அன்புள தோவெனின் மேலுனக்கே. 83. ஆண்டவ ரேயதை யறிவீரே ஆமுமை நேசிக் கிறேன்எனவே மீண்டுமே யிதுபதிற் சொல்லவுமே மெய்பொடு பேதுரு சைமனுமே ஆண்டவர் சொன்னார் மறுதரமும் மேய்ப்பா யென்னுட ஆடுகளை ஆண்டவ ரின்னுமே யவனிடமே யந்தவோர் கேள்வியே கேட்டனரே. |