91. மரணமோ இயற்கையா மரணமல்ல வன்படு கொலையா மரணமாமே மரணமா மிதனாற் கடவுளையே மகிமையே செய்வதா மரணமாமே தருணத் தினிலே தவறினோனே தவறா தென்றுமே யெதுவரினும் மரணமே வரும்வரை நிலைத்திருந்தே மருளாச் சாட்சியே யாவனன்றோ. 92. என்னைப் பின்செல் வாயென்றார் இன்னவை சொன்னபின் யேசுபரன் பின்னாற் பார்த்தனன் பேதுருவே பின்வரக் கண்டன னோர்சிஷியன் முன்னோன் ஜேசுவுக் கன்புள்ளோன் முன்னவன் மார்பினிற் சாய்ந்திருந்தே என்னோ ஆண்டவா ஆருமையே காட்டுவோன் என்றுமே கேட்டவனே. 93. இன்னோன் வருவதைக் கண்டவனும் இன்னோன் காரியம் என்னவென்றான் என்னஇச் சிஷியனின் முடிவெனதோ எனஅவன் கேட்டதே ஜேசுவையே என்னவோ உனக்கதே வரும்வரையான் அவனிருப் பதுமென் சித்தமெனில் என்னவோ உனக்கது நீயெனையே தொடர்ந்துபின் வருவாய் என்றனரே. 94. மரிப்பதே யில்லையிச் சீடனென பேசினர் மற்றவர் தங்களுக்குள் மரிப்பதே யில்லையிச் சீடனென மன்னவன் ஜேசுவோ சொன்னதில்லை பரிந்துநீ கேட்கவே வேண்டியதில் பண்பொடு யான்வரு மட்டுவன் இருப்பதேன் சித்தமே யாமெனிலோ அதுஉனக் கன்னவோ என்பதுதான். 182. மலைமேற் காட்சி. மத். 28 : 16 - 20; மாற். 16 : 15 - 18; லூக். 24 :49. 95. சென்றனர் சிஷியரே சிலதினமே செல்லவே யவணுள வார்மலைக்கே அன்னாரு தரமவர் குறித்தமலை முன்பல தரமவர் போனமலை மன்னிய பதினொரு வருமடைந்தார் மன்னவன் தரிசன மம்மலைமேல் இன்னுநம் பகமிலாச் சிலரிருந்தார் ஏனையர் மிகமகிழ் கொண்டனரே. 96. கிட்டியே சேர்ந்தனர் சீடரையே கிருமையார் சமுத்திர மானவரே மட்டிலா ஆட்சியே யெனக்குளதே யெவணுமே வானிலும் பூமியிலும் அட்டிசெய் யாதுமே செல்லுவீரே அகிலமா மிதிலே யெங்கெவணும் தட்டிலா தறிவியு மெவணெவணும் சகலருக் கும்மருட் சுவிசேடம். 97. கருணையாய்ச் சகலமாஞ் ஜாதியரை சீடரே யாக்குவீர் கனிவொடுமே திரித்துவ ரின்திரு நாமத்தில் தீக்ஷைகொ டுத்தே திடப்படுத்தும் விரிவுற வுமக்கியா னிட்டவையாம் மேன்மையாங் கட்டளை யாவையுமே பிரியமா யவர்களுங் கைக்கொளவே பேணிநீர் போதியு மவர்களுக்கே. |