பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

109

குற்றமற்றவனே ! வணக்கம்.  திருமால் நான்முகன் முதலிய (தேவர்களும்) உன்னை அறியமாட்டாத பெருமையையுடைய மலரகிதனே ! வணக்கம்.  (உன்னை) யான் அறிந்து (வழிபடும்) வண்ணம் முன்னதாக (எனக்கு) அறிவு தந்தருளிய ஞானசொரூபனே! வணக்கம்.  குளிர்ந்த தாமரைத்தடங்கள் (அகத்தே) சூழ்ந்த திருக்கருவை யென்னும் சிறந்த நகரின் கண்ணே களாமரத்தின் நீழலில் எழுந்தருளியிருக்கும் காலகாலனே ! இமயம் என்னும் பெரியமலை (யரசன் பெற்ற) புதல்வியான ஒப்பனை யம்மைக்கு இனிமைதரும் அன்பனே ! என் தந்தை யனையானே ! வணக்கம்.

    ‘நாரணன் விரிஞ்சன் ஆதியோர் நின் அறியகிற்றிலாப் பெருமை அமல’ என இயைக்க.  விரிஞ்சன்-பிரமன். அறிய கிற்றிலா-ஈறு கெட்ட எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சம் ; அறி-பகுதி, அ-சாரியை, யகரத்தோற்றம் சந்தி, கில்-ஆற்றலுணர்த்தும் விகுதி ; அனைத்தும் ஒரு பகுதியாய் ‘அறியகில்’ என நின்று துகரச்சாரியையும் இல் என்னும் எதிர்மறை விகுதியும், ஆகாரச் சாரியையும் கூடி ‘அறியகிற்றிலா’ என்றாயிற்று ; லகர தகரங்கள் றகரமாகத் திரிந்ததும் உகரக்கேடும் சந்தி.  கால காலன்-யமனுக்கு யமனானவன் ; கூற்றை யுதைத்தமைபற்றிச் சிவபெருமானுக்கு இப் பெயர் வழங்கலாயிற்று : ‘கூற்றுவன் தனக்கோர் கூற்றுவனாகி’ என்றார் நக்கீரரும்.  மால் வரை-பெரிய மலை.  எந்தை-என் தந்தை என்பதன் மரூஉ.

    இறைவனது திருவுருவம் சத், சித், ஆனந்தம் என மூன்றென்பர்.  இவற்றுள் சித் என்பது அறிவாதலால் அவ்வடிவைக் குறிப்பிட்டு ‘ அறிவ ’ என விளித்தார்.  அவனை வணங்குதற்கும் அவனருள் வேண்டுதலின், உன்னை அறியும் அறிவை, உன்னை அறியும் முன் நீயே கொடுத்தருளினை என்பார் ‘ முன்னறிவு தந்த ருளறிவ ’ என்றார். இமயம் என்னும் பர்வதராஜன் புதல்வி பார்வதி யாதலால் ‘இமயமால்வரைக் குமரி’ என்றார்.

(94)