பக்கம் எண் :

50

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

42. உணராத நின்நிலையை
        நீஉணர்த்த உணர்ந்ததற்பின்
    புணராத தாடலையிற்
        புணர்ந்ததெனப் புளகோங்கத்
    தணவாமல் எனைஉனக்குத்
        தந்துருகி இரண்டற்றேன் ;
    பணராசச் சிலம்பணிந்த
        பழமறைஎம் பெருமானே !

    பாம்பரசைச் சிலம்பாகத் தரித்த பழமையான வேதங்களுக்குரிய எமது தலைவனே! அறிதற்கு அரிய உனது நிலைமையை நீ அறிவிக்க (யான்) அறிந்த  பின்பு கிடைத்தற்கரிய (உனது) திருவடி (அடியேனுடைய) தலையில் பொருந்தியது என்று (கருதி, அதனால்) ஆனந்தம் பெருக என்னை உனக்கு (இடை சிறிதும்) நீங்காமல் கொடுத்து (எனக்கென ஒன்றின்றி எல்லாம் உன் உடைமையாக உன்னிற் கலந்து யான் நீ என்னும்) துவிதபாவனை இழந்து அத்துவித வாழ்வைப் பெற்றேன். (இதனினும் யான் பெறத்தக்க பேறு வேறில்லை).

    புளகு-மகிழ்ச்சி. தணவாமல்-நீங்காமல். பணம்-படம் ; இலக்கணையால் படத்தை யுடைய பாம்புக்குப் பெயராயிற்று.

    இரண்டறுதலாவது சிவபெருமானினின்றும் தன்னைப் பிரித்துணரும் துவித பாவனை நீங்கிச் சிவபெருமானது உடைமையே தானாதலால் தனக்கென வேறு தனிநிலையில்லை யென்னும் அத்துவித பாவனை பெறுதல். இதுவே அத்துவித முத்திநிலை. இந்நிலையினைப் புலப்படுத்தவே ‘ தாடலையிற் புணர்ந்ததென ’ என இருபொருள்படக் கூறினார். இதிற் பெறக்கிடக்கும் பிறிதொரு பொருளாவது ‘ தாள் தலை என்னும் இருசொற்கள் தாடலை என ஒரு சொல் நீர்மையவாய்ப் புணர்ந்து நின்றாற்போல’ என்பதாம்.