பக்கம் எண் :

72

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

முருகக்கடவுளைத் தந்தருளிய இறைவனே! திருக்கருவையி லெழுந்தருளிய தேவனே ! (நான்) என் மனத்தை உனக்குக் கொடுத்தேன், (நீ) உனது திருவருளினை எனக்குத் தந்தருளினாய் ; வணக்கத்தை உனக்குத் தந்தேன், தாமரைமலர்போன்ற திருவடியை எனக்குத் தந்தருளினாய்; பசிய பூங்கொத்தை உனக்குத் தந்தேன், முத்தியை எனக்குத் தந்தருளினாய்.

வந்தனை-வணக்கம். பைந்துணர்-பசிய பூங்கொத்து.  பரகதி-மேலானகதி-முத்தி.

தெய்வம் ஒன்று உண்டு என்று உணர்ந்து சிந்திக்குமளவும் திருவருள் வெளிப் பட்டுத் தோன்றாதாகலின், ‘சிந்தனை உனக்குத் தந்தேன் ; திருவருள் எனக்குத் தந்தாய்’ என்றார்.  திருவாதவூரடிகள் ‘தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி-முனிவிலாததோர் பொருளது கருதலும்-ஆறுகோடி மாயாசத்திகள்-வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின’ என்றருளிச் செய்தமை காண்க, அவனை வணங்குதற்கும் அவன் அருளே காரணமாதலினாலும் அடியார் வணங்குதற்கு உரியது இறைவன் திருவடியே யாதலினாலும் திருவருள்பெற்றமை கூறியபின் ‘வந்தனை உனக்குத் தந்தேன்; மலரடி எனக்குத் தந்தாய்’ என்றார்.  ‘ அவனருளாலே அவன்தாள் வணங்கி’, என்ற திருவாத வூரடிகள் திருவாக்கையும் காண்க.  இறைவன் திருவடிக்கு அடியார் செய்யத் தக்கது அர்ச்சனையே யாதலாலும் அடியார் விழையும் முத்திப்பேறு இறைவன் திருவடியிற் கலத்தலே யாதலாலும், திருவடி பெற்றமை கூறியபின் ‘பைந்துணருனக்குத் தந்தேன்; பரகதியெனக்குத்தந்தாய்’ என்றார்.

சிந்தனையாவது தியானம்; வந்தனையாவது வணக்கம்; அடிக்கு மலரிடுதல்        அர்ச்சனை.  ஆதலின், தியானத்தால் திருவருளும், வணக்கத்தால் திருவடிப் பேறும், அர்ச்சனையால் முத்தியும் சித்திக்குமென்றாராம்.

இழிந்தவற்றைக் கொடுத்து உயர்ந்தவற்றைப் பெற்றதாகக் கூறலின் மாற்று நிலை யணி கொள்ளக் கிடக்கும்.

(63)