பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

73

64. தேவனே! நின்னை யல்லாற்
        பிறிதொரு தேவை எண்ணேன்;
    பாவனை நின்னி னல்லாற்
        பிறிதொரு பற்று மில்லேன்;
    யாவையுங் காட்டக் கண்டேன்;
        என்னுளே நின்னைக் கண்டேன்;
    காவலா ! கருவை யானே !
        இனிமற்றோர் காட்சி யுண்டோ ?

    (தேவர்களுக்குத்) தேவனே !  உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை ஒரு பொருளாகக் கனவிலுங் கருதேன்; உன்னையல்லாமல் பிறிதொரு பாவனை பற்றுதலுமில்லேன்; (அதனால்) உனது தன்மை எல்லாவற்றையும் நீயே உணர்த்த உணர்ந்தேன்; (ஆதலால்) என் இதயத்தே உன்னைத் தரிசித்தேன்; எல்லா உயிர்களையுங் காத்தலில் வல்லவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! இனி (யான் காண விரும்புவது) இத் திருக்காட்சியன்றி வேறொரு காட்சியுமுளதோ ?  (இல்லை.)

    காவலன் - காத்தலில் வல்லவன் - தலைவன்.  காட்சி-காணப்படுவது; காண்-பகுதி, சி-தொழிற் பெயர் விகுதி, ணகரம் டகரமானது சந்தி.

    கேள்வியாலும் ஆராய்ச்சியாலும் சிவபெருமான் ஒருவனே தெய்வமென்று உணர்ந்தமையால் ‘ பிறிதொரு தேவை யெண்ணேன்’ எனவும் ‘பிறிதொரு பற்று மில்லேன்’ எனவும் கூறினார்.  ‘சிவனென யானும் தேறினன் காண்க’ எனவும்,

‘புற்றில்வா ளரவு மஞ்சேன்; பொய்யர்தம் மெய்யு மஞ்சேன்;
    கற்றைவார் கடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
    மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
    கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்ச மாறே ’

எனவும் திருவாதவூரடிகள் திருவாய்மலர்ந்தருளியதும் காண்க.