பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

105

வளைவு.  வாள் ஒளியாதல் 88-ம் செய்யுளுரையிற் காண்க.  குருத்த-கோபித்த.  குழகன்-அழகன்.  ‘ தந்தவா போற்றி ’ முதலாயின விளித்தொடர்.  தந்தவாறு என்பது விகாரப்பட்டு வந்ததாகக் கொண்டு தந்த விதம் புகழப்படுவது எனப் பொருளுரைப்பினுமாம்.

    பாமாலையே உனக்கு இனியதாவது என்றறிந்து பாமாலையால் உன்னைத் துதிக்க விரும்பிய எனக்கு அவ் விருப்பத்தை நிறைவேற்றத் தக்க நாவன்மையைத் தந்தருளினை என்பார் ‘இனிய பாடலால்...ஏத்த நாத்தருமிறைவ’ என்றார். இவ்வாறு உனக்கு இனிய பாடல் எனக் கொண்டு பொருளுரையாவிடத்துத் தாம் பாடி ஏத்தும் பாடலைத் தாமே இனியதென இறைவனுக்குக் கூறினாராகித் தம்மைத் தாமே இடமல்லா இடத்திற் புகழ்ந்துகொள்ளும் குற்றம் ஆசிரியர்க்கு ஏறும் என்பதுணர்க.  சிவபெருமானுக்குப் பாட்டு இனியதாவதை,

    பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
    பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
    நன்மாலை மாலையா எடுத்துச் சொன்னார்.
    நலமறிந்து கல்லாத நானும் சொன்னேன்.

எனவரும் தாயுமான சுவாமிகள் திருவாக்கினும் காண்க.

(91)

92. குழவி வெண்ணிலா அனைய வெண்ணகைக்
        கொடியி டத்துவாழ் குரிசில்! போற்றி.என்
    பழைய தீவினைப் பகைதொ லைத்திடும்
        பாவ நாசனே ! போற்றி. காய்சினத்(து)
    உழுவை யின்வரித் தோல சைத்தபட்(டு)
        உடைம ருங்கினோய் ! போற்றி. செந்தமிழ்க்
    கழும லப்பதிக் கவுணி யன்புகழ்
        களவின் நீழலிற் கடவுள் ! போற்றியே.

    இளமையான வெள்ளிய சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய புன்சிரிப்பினையுடைய பூங்கொடியனைய உமா