பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

113

    சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாதமார்க்கம் எனச் சிவ பெருமானை வழிபடும் மார்க்கம் நான்காகக் கூறுவர்.  இறையும் உயிரும் இவ்வகையால் நிற்கும் முறைமை முறையே, காதலனும் காதலியும் தோழனும் தோழனும், தந்தையும் மகனும், ஆண்டானும் அடிமையும் போல்வதாமெனவும்;    இந் நால்வகைக்கும் எடுத்துக்காட்டாவார் முறையே திருவாதவூரடிகளும்,        சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரையருமாவர் எனவும் கூறுவர்.  இதுகொண்டு ‘காதனண்புடைக் கவிஞன்’ என்றதறிக.

(96)

97. ஐய னே!சரண் போற்றி. என்னையாள்
        அப்ப னே!சரண் போற்றி. பொய்யிலா

    மெய்ய னே!சரண் போற்றி. வானவர்
        வேந்த னே!சரண் போற்றி மான்மழுக்
    கைய னே!சரண் போற்றி. காலனைக்
        காய்ந்த வா!சரண் போற்றி. தீநிறச்
    செய்ய னே!சரண் போற்றி. காமனைச்
        செற்ற வா!சரண் போற்றி. தேவனே!

    (தேவர்களுக்குத்) தேவனே !  கடவுளே !  உன் திருவடிக்கு வணக்கம்.  என்னை ஆண்டருளும் அப்பனே ! உன் திருவடிக்கு வணக்கம்.  பொய்மை  அற்ற சத்தாயுள்ளவனே ! உன் திருவடிக்கு வணக்கம்.  தேவர்களுக்கு இறைவனே !  உன் திருவடிக்கு வணக்கம்.  மானையும் மழுவையும் ஏந்திய திருக்கரங்க ளுடையவனே !  உன் திருவடிக்கு வணக்கம்.  இயமனைக் கோபித்தவனே !       உன் திருவடிக்கு வணக்கம்.  தழல்போலச் சிவந்த மேனியனே !  உன் திருவடிக்கு வணக்கம்.  காமனை அழித்தவனே !  உன் திருவடிக்கு வணக்கம்.

(97)