பக்கம் எண் :

38

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

29. பெருமை சான்றநின் திருவெழுத் தைந்துமே
        பெரும்புணை எனப்பற்றி
    அருமை சான்றஇப் பவக்கடல் கடக்குமா(று)
        ஆசையில் துணிகின்றேன்
    இருமை இன்பமும் அடியவர்க்(கு) ஊட்டிடும்
        இறைவனே ! எம்மானே !
    தரும மூர்த்தியே ! ஒப்பனை வனமுலை
        தழுவுதிண் புயத்தானே !

    இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும், தன்னையடைந்த, அடியார்க்கு ஊட்டும் இறைவனே! எமது பெருமானே ! தருமத்தையே திருவடிவமாகக்      கொண்டவனே ! ஒப்பனை யென்னுந் திருநாமம் வாய்ந்த உமையம்மையினது      சந்தனக்கோலம் அமைந்த தனத்தைத் தழுவிய வலிய புயத்தை யுடையவனே ! பெருமை நிறைந்த உனது பஞ்சாக்கர மந்திரத்தையே பெரிய தெப்பமெனப் பற்றி அருமை பொருந்திய இப் பிறவிக் கடலைக் கடக்கவேண்டுமென்று ஆவலோடு துணிகின்றேன். (என்னைக் கரைசேர்ப்பது உனது கடன்.)

    சான்ற-நிறைந்த, பொருந்திய. பவக்கடல்-பிறவிக்கடல். இருமை-இம்மை மறுமை. வனம்-அழகு. திண்புயம்-வலிய புயம். ஆசையில்-ஆசையோடு ; உருபு  மயக்கம்.

    பிறவி வாயிலாகவே முத்திப்பேறு பெறவேண்டியிருத்தலின் ‘அருமைசான்ற   இப்பவக்கடல்’ என்றார். ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்த லரிது’ என்றதுங் காண்க.

(29)