பக்கம் எண் :

48

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

அன்பர் மனத்தை வளைத்து அல்லலகற்றலும் அறிவுதவலும் கல்வி நல்கலும் எளிதென்பதும் குறிப்பினாற் பெறப்படும்.

(39)

40.  வாழ்வை நம்பி மதிகெட்டுக் கும்பியில்
        வீழ்புன் மாந்தார்க் குறுதி விளம்புவேன்:
    தாழ்ச டைக்கள வீசன்தன் ஆலயம்
        சூழ்தல்; சூழில் துறக்கம் கிடைக்குமே.

    இவ்வுலக வாழ்க்கையை ஒரு பொருளாக நம்பி, சிவபெருமானையுணரும்     உணர்ச்சி கெட்டு, நரகத்தில் வீழும் புல்லறிவினையுடைய மனிதர்க்கு, ஓர் உறுதியை எடுத்துக் கூறா நிற்பேன்: தாழ்ந்த சடையையுடைய களாநிழலில் எழுந்தருளிய இறைவனது திருக்கோயிலைப் பிரதக்ஷிணஞ் செய்க; செய்தால் முத்தி கைகூடும்.

    கும்பி-நரகம். சூழ்தல்-வலம் செய்க. சூழின்-வலஞ் செய்தால்.

    சூழ்தல் என்பதற்குக் கருதுதல் என்னும் பொருளும் உண்டாகையால், ‘சூழ்தல் சூழின்-வலம் வருதலைக் கருதினால்’ எனப் பொருளுரைப்பதுமுண்டு. துறக்கம் கிடைப்பது வலம் வருதலால் என்பதேயன்றி வலம் வருதலைக் கருதுவதால் என்பதில்லையாகையால் முன்னைய பொருளே சிறக்குமாறு காண்க.                        (40)

ஐந்தாம் பத்து.

கொச்சகக் கலிப்பா.

41. கிடைத்தபொருள் கரத்திருக்கக்
        கிடைத்திலவென் றயர்வார்போல்
    படைத்தநின தருள்பெற்றும்
        பெற்றிலர்போற் பரிவுற்றேன்;
    முடைத்தலையிற் பலிகொள்ளும்
        முகலிங்கா முகிழ்த்தநிலாச்
    சடைத்தலையாய் ! நின்மாயம்
        யானுணருந் தரத்ததோ ?