பக்கம் எண் :

28அழகர் கிள்ளைவிடு தூது


மனமகிழ்வுண்டாக்கிப் பின் தூதுவிடுத்தல் உலகியல்பு. அவ்வியல்பினையறிந்தே
ஆசிரியர் "கிளியரசே !" என விளித்துப் பலவாறு புகழ்ந்து "ஊட்டுவேன், நலம்
காட்டுவேன்" என்று பலபடப் பாராட்டித் தலைவி தூது விடுப்பதாகப்
பொருளமைத்துள்ளார், உலகியலுணர்வை இந்நூலுட் பலவிடங்களில் உய்த்துணர்க. இரு
பொருள் படச் சொற்றொடர் அமைப்பதே இக் கவிஞர்க்கியற்கை என்பதை இந்நூல்
காட்டும். "சீர்கொண்ட வையம் படைக்கு மதனையு மேற்கொண்டு" என்ற தொடரில்,
சிறப்பாகிய பூமியைப் படைக்கும் அத்தொழிலையும் தனக்குரியதாகக் கொண்டு என்பது
வெளிப்பொருள். சிறப்பாகிய ஐந்து அம்புகளை யடைத்து வைத்திருக்கும்
மன்மதனையும் தன் மேல் ஏற்றிக்கொண்டு என்பது உரிய பொருள். இவ்வாறு
வந்துள்ள இடங்கள் பல ஆதலால் அவற்றை உரைவிளக்கம் பார்த்துக் கண்டு
களித்துச் சொற்சுவை பொருட்சுவை துய்த்து இன்புறுக.

   இந்நூலின்கண் சிறப்பிக்கப் பெற்றுள்ள அழகர்மலை பண்டு திருமுருகன்
திருக்கோவிலாகத் திகழ்ந்தமைக்கு வேறு பல வலிய சான்றுகளும் கிடைத்துள்ளன.
அவை இஞ்ஞான்று 'திரு அழகர் கோவில்' வெளியீடாகிய வரலாற்று நூலாலும்
வலியுறுத்தப்படுகின்றன.

   சென்னைக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியுள்ள அறிஞர் திரு. வி.
வேங்கடசுப்பு ஐயர் என்பவர் 'அழகர் மலையும் கல்வெட்டுக்களும்' என்ற தம் நூலில்
பின் வருமாறு கூறுகின்றனர்:

   "இப்போது பதினெட்டாம்படிக் கறுப்பன் இருக்கும் இடத்தில் 'முருகன் கோவில்'
இருந்திருத்தல் வேண்டும். 'வேலும் சேவலும்' இன்றைக்கும் இங்கே காணிக்கையாகக்
குவிகின்றன. வேல்கள் இங்கே நடப்பெற்றுள்ளன. பழைய கல்வெட்டுக்கள் இங்குள்ள
ஆண்டவன் 'பரமகாமி' என்றே குறிக்கின்றன. யானைமுகக் கடவுள் கோவிலும்
சேத்திர பாலகர் கோவிலும் இன்னும் பெருமாள் திருமுன்னர்
மாமண்டபத்திலிருக்கின்றன. அங்கே திருநீறும் வழங்கப்