பக்கம் எண் :

விளக்க உரை61


பச்சைக் குதிரைகள் ஏழும் கூடினும் உனக்கு ஒப்பாகுமோ? (ஆகாது.)

   (வி - ம்.) நாளும் காம விழைவு மக்கட்குத் தோன்றுவதால் அதற்குக் காரணம்
அவன் போர் புரிவதே என்பது தோன்ற "நாளும் மலைத்திடு மாரன்" என்றார்.
சூரியனுடைய தேரில் ஒற்றைச் சக்கரம் உண்டு. ஒற்றைச் சக்கரமுடைய தேரினை ஏழு
குதிரைகள் கூடி இழுக்கின்றன; ஒரு சக்கரமும் இல்லாத மதன் தேரினை நீ தனியே
இழுத்துச் செல்கின்றாய் ; அவற்றிலும் மிக்க பலமுடைய நீ என ஒப்பாகாமைக்குக்
காரணம் காட்டினர். கால் - காற்று. கால்+தேர்=காற்றேர் என்றாயிற்று. வண்டில் -
சக்கரம். கால் பங்கு ஆக இருந்த தேரை நீ முழுத் தேராக்கி இழுத்துத் திரிகின்றாய்
என வேறு பொருள் தோன்றுவது காண்க. முழுத்த+ஏர்+ஆய்=முழுத்தேராய் என
அகரம் குறைந்து நின்றது. இது தொகுத்தல் விகாரம். முழுத்த - முற்றிய. ஏராய் -
எழுச்சியாக. குதிரை என்பது குதிராய் என விளியாயிற்று.

5, 6 : கண்ட, செக முழுதுநீ.........சொல்லாய்


   (சொ - ள்.) யாவரும் பார்க்கின்ற உலக முழுவதும் நிறைந்திருக்கிறாய் நீ ; ஞான
விளக்காகவும் தோன்றுகின்றாய் என்பதை (உன் வயிற்றிற் பிறந்த) சுக முனிவரே
எடுத்துக்காட்டினரே ! (இதனை ஆய்ந்து) சொல்வாய்.

   (வி - ம்.) சுக முனிவர் என்பவர் வேதவியாசர் அருளால் கிளி வடிவங்
கொண்டிருந்த "கிருதாசி" என்ற தெய்வப் பெண்ணிடம் பிறந்தவர். பிறந்தபோதே துறவு
பூண்டு நிலத்தில் நடந்து காடு சென்றார். அவர் தந்தையான வியாசர் "மதலாய்"
என்றழைப்ப, எல்லாப் பொருளும் "ஏன்" என்று கேட்டன என்பது வரலாறு. சுக
முனிவர் வாய் திறந்து ஏன் என்று கேட்ட போது எல்லா உயிர்களிடத்தும் அவ்வொலி
தோன்றியதால் அம்முனிவர் பெருமை யாவும் நின்பாற் றோன்றிய காரணத்தால்
ஆயின என்பது குறித்து "சுக முனியே சொல்லாரோ" என்றார். "பிறந்தபொழு
தேதுறந்து பிறைக்குழவி போனடப்பப் பின்போய்த் தொன்னூல், அறைந்த புகழ் வியாத
முனி யாதரத் தான் மதலா யென் றழைப்பச் செவ்வாய், திறந்து நறை பொழியு
மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும், நிறைந்துறையுஞ்
சுகமுனிவனிரையிதழ்த்தாமரை மலர்த்தா ணினைதல் செய்வாம்" (பாகவதம், காப்பு 3).
விரிவு சுகர் வரலாறு காண்க.