பக்கம் எண் :

62அழகர் கிள்ளைவிடு தூது


6, 7 : வகை வகையாய் எவ்வண்ணமாய்ப் ........அடங்குமே

   (சொ - ள்.) பலவகையாய் எத்தனை விதமாகப் பறக்கின்ற எப்பறவையாயினும்
உன் ஐந்து வகையான நிறங்களில் ஒன்றாகத்தானே அடங்கும் (வேறு நிறம் அவற்றிற்கு
உண்டோ)?

   (வி - ம்.) ஐ வண்ணம் : வெள்ளை சிவப்பு, கருமை, மஞ்சள், பச்சை என்பன.
இவ்வைந்து நிறமும் உனக்கமைந்து இருப்பதால் பறவைகள் எல்லாம் உனக்குள்
அடக்கமாம் என்று அதன் சிறப்புக் கூறினர் எனக் கொள்க.

7, 8 : மெய்வண்ணம் ........சிவந்தாய் மொழிந்திடாய் !

   (சொ - ள்.) நின் உடல் நிறத்தைப் பார்த்தபோது உமையவள் என்று சொல்வார்
என்று நீ நினைத்தோ, மூக்கு மட்டும் சிவப்பாக அமைத்துக்கொண்டாய் சொல்வாயாக.

   (வி - ம்.) பார்ப்பதி ஒரு பெருந்தெய்வம் ; அவளைப்போல நாம் இருத்தல்
தகுதியன்று என்று நினைத்து மூக்கைமட்டும் சிவப்பாக மாற்றியிருப்பதுபோலத்
தோன்றுகிறது. பணிவும் அடக்கமும் உடையை என்பதற்கு இஃது ஓர் அறிகுறி என
அதன் பெருமை கூறினர்.

8, 9 : நாக்குத் தடுமாறுவோரை .......விள்ளாய்


   (சொ - ள்.) நாக்குத் தடுமாறிப் பேசுவோரை (உளறு வாயரை) யெல்லாம்
மக்கள்தம் பக்கம் இருத்தாது தள்ளி விடுவர் (நீயும் அத்தகைய பேச்சுப் பேசினும்)
உன்னைத் தள்ளி விடுவார் ஒருவர் உளரோ? நீயே சொல்வாய்.

   (வி - ம்.) உளறு வாயராய்த் திருத்தமில்லாமற் பேசுவோரைக் கண்டால் "நீ
பேசுவது ஒன்றும் பொருள் விளங்கவில்லை போ வெளியே" என்று வெறுத்துப்
பேசுவது மாந்தர் இயற்கை. இவ்வாறிருக்க நீ பேசுவதும் திருந்தாத சொல்லாயினும்,
அதனைக் கேட்க எவரும் விரும்புகின்றனரே ! எத்துணை இனிமை உன் சொல்லில்
இருக்கிறது ! என அதன் பெருமை விளக்கியது இது.