பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

2

வலம

வலம்புரிப்படை

        நல்லசுரர் குலமுழுதும் தொழுது வாழ்த்த,
            நனிஅசனிக் குரல்கேட்ட நாகம் போல
        வல்அசுரர் குடர்குழம்ப, முழங்கும் வெல்போர்
            வலம்புரியை நலம்புரிந்து வணக்கம் செய்வாம்:    
      

(3)

        “மலர்க்கற்றை நறுங்குஞ்சி முடியா முன்னே,
            மறைநான்கின் பொருள்முடித்து வடித்து வார்த்தை
        சலக்குஅற்று நின்றநிலை சலியா மைந்தன்
            தான்கற்ற எட்டெழுத்தும் தழைக்க!” என்றே.         

(4)

        ‘குஞ்சி முடியா முன்னே’: மயிர்முடி கூடாத குழந்தைப் பருவத்தே.

விற்படை

       மைவளையும் கருங்கடல்போல் முழங்கி ஆர்த்து
          வாள்அவுணர் பொர, ஒருநாள் வானோர் சேனை
       கைவளையும் படிவளையும் கொடிய போரில்
          கால்வளையும் தடஞ்சிலையைக் கருத்துள் வைப்பாம்: 
      

(5)

        ‘கைவளை கால்வளை’: வில்லை இழுக்கும்போது, ஒருகை நீட்டி ஒருகை முடக்கி, ஒரு கால் ஊன்றி ஒரு கால் வளைத்து நிற்கும் நிலை. ‘கால்’: வில் நுனி எனவும் ஆம். ‘வளையும் போர்’: சூழும் போர்.

        “கயல்வளைய விளையாடும் கலங்கல் நல்நீர்க்
            காவிரியில் கண்துயிலும் பெருமாள் காக்கும்
        செயல்வளையாது, அறம்வளர்க்கும் செங்கோல் செல்லத்
            திருஆணை உலகேழும் சிறக்க!” என்றே.         

(6)

        ‘கலங்கல் நன்னீர்’ ‘தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கம்’ (திருமாலை). ‘காக்கும் செயல் வளையாது’: திருமால் காத்தற் கடவுள் ஆதலின், அவன் காத்தல் செயல் கோடாமல். ‘திரு ஆணை’: திருமகளுடைய கருணையே திருமாலுடைய ஆணை, ‘திரு ஆணை நின் ஆணை’ ( திருவாய்மொழி ).

வாட்படை

        வெம்பகைஞர் உடல்உகுசெம் புனலூடு ஆடி
            வெள்நிணமும் பசுந்துளவும் விரவி நாறச்
        செம்பருந்து விருந்தாரச் சிறைவண்டு ஆர்க்கும்
            தெய்வநெடுஞ் சுடர்வடிவாள் சிந்தை செய்வாம்:       

(7)

        செம்மை, வெண்மை, பசுமை விரவி இருக்கும் அணி காண்க. பருந்துக்கு விருந்து செய்ய வண்டு பாடும்.