8
8. பேய் முறைப்பாடு
அதுநோக்கும் தொழிலாறி
அடிவணங்க, அணங்கரசி
இதுநோக்குக எனஅருளின்
இருந்தவரை முகம் நோக்க,
(149)
மெய்ந்நோக்க முடன் ஒருபேய்
விழுந்திறைஞ்சி எழுந்து,
“இறைவி
இன்னோக்கம் பெறப் பெறுவார்க்கு
எப்பொருளும் எளிதன்றோ?
(150)
‘இன்னோக்கம்’: இனிய பார்வை.
“இவ்வண்ணம் உலகேழும்
எனையூழி தழைப்பது; நின்
செவ் வண்ண வாள் விழியின்
திருநோக்கின் அருள்அன்றோ?
(151)
“அன்னே! முன் உயிரனைத்தும்
அளித்தனை நீ ஆனாலும்,
என்னே உன் பெருங்கருணை
எம்அளவும் கண்டிலமே!
(152)
“பற்றிநெடும் பசியான
படர்கொடுந்தீச் சுட,
உடம்பு
வெற்றெலும்பு விறகாக
வேகின்றோம். என்செய்வோம்!
(153)
“எழாழி சூழ்உலகில்
இருபொழுதும் பசிபடைத்த
பாழாவான், எம்மைவெறும்
பசியாலே படைத்தனனே!
(154)
‘இரு பொழுது’: பெரும் பொழுது.
“நல்லார்க்கும் தீயார்க்கும்
நானிலத்தில் பிறந்திறப்பார்
எல்லார்க்கும் நமன் கூற்றம்.
எங்களுக்குப் பசிகூற்றம்!
(155)
|