New Page 1
“அந்நாகம் அழகுடன்நின்
றாடும் காலை,
அனந்தன்தன் தலைஅதிர,
உலகம் ஏழும்
கைந்நாகம் இருநான்கும் கலங்க,
வானோர்
காணாத வகைகரந்து திரியக்
கண்டேன்.
(222)
“மற்றுஅதுஒரு மணிஈன்று மகிழக்
கண்டேன்;
மகிழ்ந்துஅதனை மனத்துஎழுந்த
சினத்தால், தானே
பெற்றதென இரங்காது நெருங்கக்
கண்டேன்;
பேரொளிமா மணிபின்னும்
பிறங்கக் கண்டேன்.
(223)
“அப்பொழுதின ஒருகருடன் தோன்றக்
கண்டேன்;
அழல்நாகம் ஆகம்இரண் டாகக்
கண்டேன்;
ஒப்புஎழுத அருங்குருமா மணியின்
சோதி,
உலகுதொழும் கதிரொளிபோல்
ஒளிரக் கண்டேன்.
(224)
* அக்கணத்தில் தெய்வஅணங்கு
“அல்லல் இனிச்சிலநாளே
இக்கணத்தில் இரணியன்போம்”
எனநின்று இயம்பினதே.
(225)
கண்டகனா இது என்னக் கேட்டுஅணங்கு,
“கணங்கள்! அதன்
பொருள்கேண்மின்! கனகன்தன்பால்
தொண்டைமணி வாய்மதலை
ஒருவன்தோன்றும்.
தோன்றல்அவன்
சொல்லிடையே சுருதி தோன்றும்.
(226)
“சுருதியிலே சுடராழி முதல்வன்
தோன்றும்.
தோன்றஎதிர் ஏன்றுஅவுணர்
தொலைந்தபோரில்
குருதியிலே களப்பரணிக் கூழும்தோன்றும்.
குறைதீர்ந்தது உமக்கு”
என்னாக் கூறக்கேட்டே.
(227)
பேயினம் அவையடையப்
பெரியதோர் உவகையினால்,
மாயவன் மலர் மகள் சேர்
மகிணனை வாழ்த்தினவே.
(228)
ஆயசெருக் களம் கணம்கண்டு
அடும்கூழ்அன்று உண்ணஇன்றே,
வாய்அகலம் அளந்தனவே!
வயிற்று அகலம் பார்த்தனவே!
(229)
* இத்தாழிசை கதைப்போக்கை இடையறுத்தலால்,
இடைச்செருகல்
என்று தோன்றுகிறது
|