பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

43

அன

        அன்ன மாநகர் அவுணர் காவலன்
            அசுரர் கோயில் அகம்புகத்
        தன்ன தாள்மலர் பணியவந்தனர்
            புடையில் மங்கையர் அடையவே,             

    (263)

        சொன்ன மங்கையர் தொழுமடந்தை
            சுகந்த மாலை வரக்களித்து,
        “அன்னம்! என்துணை வருக”என்றுஉடன்
            ஆசனத்தில் இருத்தியே,                     

(264)

        கங்கை மாமகள், கன்னிபொன்னி
            கலந்தெடுத்த கடாரநீர்
        கொங்கை யால்மெலி யும்குலக்கொடி
            கூடமஞ்சனம் ஆடியே,                    

(265)

        உடைபுனைந்துஇனி தமுதருந்தி,
            உயர்ந்த தாரு மலர்ந்தபொன்
        தொடை புனைந்துஉயர் கோயிலில் சுடர்
            தோயும் முன்றிலின் ஏறியே,                 

(266)

    ‘தாரு’: தரு, மரம்.

        நின்று லாவரு போதி லேநல்
            நிறம் சிவந்துஎழு செக்கர்வான்
        இன்று சாலவும் நன்று கொண்டருள்
            என்று தென்றல் இசைக்கவே,                 

(267)

        வாடை யார்விடை கொள்க! வீசுக
            மன்ற லார்குளிர் தென்றலார்!
        வேடை யானது மேல் நிமிர்ந்துஇள
            வேனி லானும் விளம்பவே,                 

(268)

    ‘விளம்ப’: பரப்ப.

        காணலாம்இனி என்று சீதள
            கலை நிரம்பிய வடிவெலாம்
        வாள்நி லாஎழ, வான வீதியில்
            வந்து சந்த்ரன் வணங்கவே,                 

(269)

    ‘கலை நிரம்பிய வடிவு’: அன்று பூரணை.            

        அளகை யம் பதி இறைவனும்தொழுது
            அருகு நின்று, அலர் முருகு தோய்
        இளகு சந்தனம் மறுகு குங்குமம்
            இருபு யங் களில் எழுதவே,                

(270)