பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

45

வந

        வந்த மாலை சுகந்த மாலை
            மனம் கலந்து புணர்ந்தபின்,
        அந்த நாள்முதல் ஆறு வெண்பிறை
            அன்று போல்இடை சென்றதே.     
             

(279)

        தேவியுடன் கலந்துஅவுணன் திளைக்கும்நாளில்,
            தேவரெலாம் திருமால்பால் திரண்டுசென்றே,
        மேவியபாற் கடல்அடங்க முறையிட்டார்ப்ப
            மேல்விளைந்த படிஅடியேன் விளம்பக்கேள்நீ.       
 

(280)

        பாற்கடலும் ஒலியடங்க ஆர்க்கும் தேவர்
            பலமுறையும் முறையிடலும், பதுமம் பூத்த
        கார்க்கடலும் துயிலுணர்ந்து, ‘வருக’ என்னக்
            காவல்புரி சங்குகன்னன் காட்டக் கண்டே,         

    (281)

    ‘பதுமம் பூத்த கார்க்கடல்’: தாமரை போன்ற அவயவங்களும் கருங்கடல் பேன்ற மேனியும் உடைய திருமால்; இல் பொருள் உவமை. சங்கு கன்னன்: திருமால் கோயில் காப்போன்.

        பூமகனே முதலாய தேவர் எல்லாம்
            “போற்றி! இருகழல்போற்றி! போற்றி!” என்ன
        “வா,மகனே! வானவரும் நீயும் வந்த
            வரவென்கொல்?” என அவனும் வணங்கி ஆங்கே,    

(282)

    மகனே என்றது பிரமனை.

        “தானவரில் இரணியன்என் றொருவன் தோன்றிச்,
            சகதண்டம் முழுதினையும் தன்பேர்ஆக்கி,
        வானவரை நலிகின்றான். இதுவே எங்கள்
            வார்த்தை” என மழைமேக வண்ணன் பார்த்தே,    

(283)

        “சங்குகன்னனே நீஅவன்பால் மகனாய்த் தோன்றத்,
            தானவன்முன் நாம்அவன்பால் சார்வுதோன்றப்
        பொங்குகின்ற சினத்தோடும் தோன்றுகின்றோம்
            போமின்” என விடைகொண்டு போந்தபின்னே,      

(284)

        நாரதனார் ஒருநாள்வந்து, ‘அவுணன்தேவி
            நல்வயிறு விளங்கு’ கென நால்வேதத்தின்
        வேரதனால் ஒருகீதம் பாடி வாழ்த்த,
            விண்ணவர்கள் எண்ணமெலாம் விளைந்ததன்றே.     

(285)

        நன்றான பேரறமும் உலகும் செய்த
            நலம்தருமா தவம்கலந்து, ஞானம்எல்லாம்
        ஒன்றான திருவுருவம் கருவாய் உள்புக்கு,
            ஒன்றிரண்டு நிறைமதியம் நிறைந்த பின்னே.        

(286)