பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

69

அனக அ

        அனக அருமறைகள் பலவும் முறைமுறையில்
            அருகு விரிசிறைகள் அகல, ஓர்
        கனக வரை விரைய வருவ தென உதவு
            கருடன் அவனும்அடி பணியவே,  
                

(446)

    ‘சிறையால் வேதங்கள் பாட’, ‘மின் பால் இயன்றது ஒரு குன்றம் வானில் மிளிர்கின்றது’ என கருடன் வருகையைக் கூறுவார் கம்பன்.

        உபய பதகமலம் உலவு தொறும் அலசி
            உரக பணி நெளிய, இடைவிடாது
        ‘அபயம், அபயம்’ என அமரர்பரவும் ஒலி
            அகில தலம் அடைய நிறையவே,
              

(447)

        உள்நின்ற நரசிங்கம், உலகெங்கும்
            குலைகுலைய, உயிர்கள் எல்லாம்
        துண்ணென்று மனம் மறுகத் தூணின்று
            புறப்பட்ட தோற்றம் கண்டே,
                 

(448)

        “ஏவர்இறை இனிஉலகுக்கு?” எனஇருந்த
            பெருந்திறலோன் எதிரே, தூணில்
        தேவர் இறை வெளிப்படலும் சிந்தையது
            தளராது சீற்றம் கொண்டே,  
                  

(449)

        கொண்டலினம் தவழ்சிகர கோபுரமும்
            கொடிமதிலும் குப்புற்று, அப்பால்
        அண்டநெடு முகடதிர ஆர்த்தெழுந்து
            போர்த்தொழிலுக்கு அமர்ந்து நின்றே,             

(450)

        “வருக, அரி வருக” எனா வாள்தடக்கை
            யவன் அழைப்பக் கேட்டு, அவன்கண்
        திருகுசின வயமடங்கல், செகம் அடங்க
            உயிர் நடுங்கச் சிரித்தெ ழுந்தே,
                

(451)

        முன்றிலிடை நின்றதிறல் முக்கோடி
            தானவரை, மூரி மேருக்
        குன்றில் உடல் பெரியவரைக் கூர்உகிரின்
            நுதி மடுத்துக் கோத்தெடுத்தே,
                 

(452)

        வாயிலிடை நின்றவரை, மண்டபத்துக்
            கண்டவரை, மழைதோய் சென்னிக்
        கோயிலிடை இருந்தவரைக் கோபுரத்துக்

            கிடந்தவரைக் கோலிக்கொன்றே,

(453)