பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

7

2

2. கடை திறப்பு

        புவனம்ஒர் அகஇதழ் இடையிலே
            பொதிஎழில் முளரியின் முதல்வனாம்
        அவன்எழு தினும், எழு தரியபேர்
            அழகுடை யவர்! கடை திறமினோ!              

(31)

    பிரமன் வீற்றிருக்கும் தாமரையின் உள் இதழ் நடுவில் உலகு பொதிந்துள்ளது: அப்பிரமனுக்கும் எழுத வொண்ணாத பேரழகுடைய பெண்கள்.

        எரிஅவிர் திருநுதல் விழியினால்
            இலன்என உரைபெறும் மதனையே,
        திரியவும் அரசிட உரியதோர்
            திருமுகம் உடையவர்! திறமினோ!                  

    (32)

    ‘எரி அவிர் திருநுதல் விழி’: தீ விளங்கும் நெற்றிக்கண், இல்லை என்றாகி அழிந்த மன்மதன், இல்லை என்ற சொல் மாறி அரசனாக இருக்கிறான் எனச் செய்வன இப்பெண்கள் திருமுகம்.

        வேல்என நெடியன கொடியபோர்
            விழியினும் மொழியினும், இடைவிடாது
        ஆலமும் அமுதமும் அருளுவீர்!
            அணிகிளர் உயர்கடை திறமினோ!              

(33)

    இப் பெண்களின் கண்கள் விடத்தையும் மொழிகள் அமுதத்தையும் அருளுகின்றன. ‘நஞ்சினொடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன’ ( ‘கம்பர்’ )

    இம்மூன்று பாட்டுக்கள் இவ்வுலகப் பெண்களைக்குறிக்கும்.

        புனையும்ஒரு நாலு பிறையுடன்உ லாவு
            புகர்கயிலை, ஆடி வருவதோர்
        அனையதனி யானை அமரும்அம ரேசன்
            அடிபரவு மாதர்! திறமினோ!           
      

(34)

    ‘நாலு பிறை’: நாலு பிறைச் சந்திரர் போன்ற கொம்புகளை உடைய அயிராவதம். ‘உலாவு புகர் யானை, கயிலை ஆடி வருவதோர் தனியானை’ எனக் கூட்டுக. இவர் வான் அரமகளிர்

        அலைகொள்புனல் வேலை யுலகுபதி னாலும்
            அடைவுகுலை யாமல், இடையிலே
        நிலைகொள்வடமேரு வரையில்விளை யாடும்
            நிகரில்அர மாதர்! திறமினோ!                  

(35)

    உலகை நிலை நிறுத்துவன மலைகள்: வடமொழியில் ‘பூதரம்’ என்பர். மேரு பூ மண்டலத்தின் நடுவில் உள்ளது இவர் மலை அரமகளிர்