பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

8

அர

        அரவுதரு கோல மலர்அமளி சேரும்
            அவர்அருள்பெ றாத மகளிர்போல்,
        இரவுதுயி லாத பரவையவை ஏழில்
            இனிதுஉறையும் மாதர்! திறமினோ        
         

(36)

    கடல் இரவிலும் ஒடுங்காதது. ‘அரவு தரு கோல மலர் அமளி’: நாக சயனம். இவர் நீர் அரமகளிர்.

        பருவமலர் மாலை மவுலிஅக லாத
            பணமணிகள் வீசும் வெயிலினால்,
        உருவம்ஒரு கோடி உடையவர்கள் போலும்
            உரககுல மாதர்! திறமினோ!                      

(37)

    மாதர் உருவம் பணாமுடிகளில் உள்ள மணிதோறும் பிரதிபலிப்பதால், ஒருகோடி உருவம் உடையவர்கள் போலத் தோன்றுவர். இவர் நாக மகளிர்.

        உடல்உருகும் இளைஞர் உடன்
            உலகடைய விலைஎழுத உலவுவனஓர்
        கடல்உவமை தருபெரிய
            கலகமதர் விழி மகளிர்! கடைதிறமினோ!        
     

(38)

    உலக முழுதும் விலையோ என எழுத முடியாத பெண்கள்: ‘கடல் மண், எல்லாம் விலையோ?’ ( திருவிருத்தம் ). அவர் கண்கள் ‘கடலினும் பெரிய கண்கள் ( கம்பன் )

        ‘ஒடியும்இடை ஒடியும்’ என உபயபத
            பரிபுரமும் ஒலிஎழ, எழக்
        கடினகன தனகலசம் அலையநடை
            பயிலுமவர்! கடைதிறமினோ!                  

(39)

    ‘கடின கன தன’: இறுகிய பருத்த முலைகள். ‘உபய தனம் அசையில் ஒடியும் இடை, நடையை ஒழியும் என ஒண் சிலம்பு அலற’ (கலிங்கத்துப்பரணி)

        சலஇயல்பும் இனிமைதரு தவளநகை
            யொடுபொருது தளர விழிவேல்
        கலவிசெய நினைவும்மொழி புலவிசெயும்
            மடமகளிர் கடைதிறமினோ!                      

(40)

    மகளிருடைய கண்கள் கலவி செய்யும் நினைப்பைக் காட்ட, அவருடைய பேச்சு புலவியைக் கூறும். இக்கபட இயல்பு இனியது.

        உடல்இரண்டும்உடன் உருகி ஒன்றுபட,
            உரைவரம்பு அழிய, விழியெனும்
        கடல் இரண்டுஅருகு கரைபுரண்டுவரு
            கலவி மங்கையர்கள்! திறமினோ!                  

(41)

        கலவியில் உடல் ஒன்றுபடும்; உரை வரம்பு அழியும்; விழிகள் புரளும்.