பக்கம் எண் :

16கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) போகமயக்கு என இயைக்க. போகம் -கலவி இன்பம். அமளி -
படுக்கை.  களிமயக்கு -கள்ளுண்டது போன்ற  மயக்கு.  புலர்தல் -விடிதல்.
கொழுநர் - கணவர். ஆகம்-மார்பு. துயில் - தூக்கம். விடிந்தது தெரியாமல்
கணவர் மார்பிடத்தே தூங்கினர் என்க.                           (17)

கணவர் வரவு பார்க்கும் நிலை கூறி விளித்தது

38.ஆளுங் கொழுநர் வரவுபார்த்து
    அவர்தம் வரவு காணாமல்
தாளும் மனமும் புறம்பாகச்
   சாத்தும் கபாடம் திறமினோ.

     (பொ-நி) கொழுநர் வரவு பார்த்து, வரவு காணாமல் தாளும் மனமும் புறம்பாக, சாத்தும் கபாடம் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) ஆளும்-தம்மை ஆட்கொண்ட; தாம் ஆளும். கொழுநர்-
கணவர். தாள்-பாதம். புறம்பு-வாயிற்படிக்கு வெளியே, பாதமும் மனமும்
வாயிலுக்கு வெளியே சென்று சென்று பார்க்க விழைந்தனவாம் என்க.   (18)

கொங்கையின் அழகு கூறி விளித்தது

39.உந்திச் சுழியின் முளைத்தெழுந்த
     உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு
அந்திக் கமலங் கொடுவருவீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி) உந்திச் சுழியின் எழுந்த பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக்
கமலம் கொடு வருவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) உந்திச்சுழி-கொப்பூழ். உரோமம்-மயிரொழுங்கு. தாள்-தண்டு. அந்திக்கமலம்-மாலையில் காணப்படும் தாமரைமொட்டுப் போன்ற கொங்கைகள். கொடு (இடைக்குறை)-கொண்டு. ஒரு தண்டில் இரண்டு கமலம் போன்றன கொங்கைகள்.                                        (19)