பக்கம் எண் :

20கலிங்கத்துப்பரணி

விழி இயல்பு கூறி விளித்தது

48.கடலில் விடமென அமுதென மதனவேள்
     கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய்
   உருவு மதர்விழி யுடையவர் திறமினோ.

    (பொ-நி.) விடமென, அமுதென, மதனவேள் படையொடு, உயிரையும்
உணர்வையும் உருவும் மதர் விழி உடையவர் திறமின்; (எ-று.)

    
(வி-ம்.)கடல்-பாற்கடல். விடம்-நஞ்சு; மதனவேள்-மன்மதன். வழிபடு மதனவேள்    என    இயைக்க.    படை  - மலர்க்  கணை.  உருவும்-
ஊடுருவிச்செல்லும்.  மதர் - செருக்கு.  கண்ணே  மன்மதன்  படைகளைக் கொண்டிருத்தல்  கூறப்பட்டது - மாதர்கண்கள்  ஆடவர்கள்  பிரியுங்கால் துன்பத்தையும்      புணருங்கால்     இன்பத்தையுஞ்     செய்வனவாம்.
"நீங்கிற்றெறூஉம்  குறுகுங்கால்  தண்ணென்ணும்" என்னுங் குறளும் ஈண்டு
எண்ணற் பாலதாம்.                                          (28)

தோற்ற இயல்பு கூறி விளித்தது

49. முறுவல் மாலையொடு தரள மாலைமுக
     மலரின் மீதும்முலை முகிழினும்
சிறுநி லாவும்அதின் மிகுதி லாவும்என
   வருந லீர்கடைகள் திறமினோ.

   (பொ-நி)முறுவல்மாலையொடு   தரளமாலை,   சிறுநிலாவும்   மிகு
நிலாவுமென  வருநலீர்  திறமின்; (எ-று.)

   (வி-ம்.) முறுவல் மாலை-பல் வரிசை.  தரளம்-முத்து. முகிழ்-மொட்டு.
சிறுநிலா- மூன்றாம் பிறை. மிகுநிலா-நிறை நிலா. என-என்று தோன்றுமாறு.
வரும் - நடந்து  வரும்.  நலீர்  -  நல்லீர்;  பெண்களே.  பல்வரிசையும்,
முத்துமாலையும்,   பிறைநிலாவும்  நிறைநிலாவும்  போன்றன.  பல்வரிசை
சிற்றளவினவாகலான்   அது,   இளம்பிறையின்  ஒளிக்கும்,  முத்துமாலை
வட்டவடிவமாகப்   பெரிதாக   இருத்தலின்,   நிறைநிலாவின்  ஒளிக்கும்
உவமையாக்கி உரைத்தார்.                                    (29)

மனங்கவரும் இயல்பு கூறி விளித்தது

50. முருகிற் சிவந்த கழுநீரும்
     முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
   செம்பொற் கபாடம் திறமினோ.