பக்கம் எண் :

மூலமும் உரையும்1

நளவெண்பா
மூலமும் உரையும்

பாயிரம்
கடவுள் வாழ்த்து
பிள்ளையார்

நேரிசை வெண்பா

1. நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதங் கூற வருந்துணையா - ஈசன்
கரியா னைத்தான் கருதுபுகழ் பூண்ட
கரியா னனத்தான் கழல்.

(இதன் பொருள்) ஈசன் - சிவபெருமானும், கரியான் - திருமாலும், அ(ன்)னத்தான் - நான்முகனும், கருது - எண்ணி வணங்குகின்ற, புகழ்பூண்ட - புகழினை ஏற்ற, கரி ஆனனத்தான் - யானைமுகக் கடவுளின், கழல் - திருவடிகளானவை, நேசர் - தன்பால் அன்புடையார், இதம்கூர - நன்மை மிகுதிப்பட, நிலைவலயம் - இம் மண்ணுலகத்தை, தாங்கும் நளன் - பாதுகாக்கின்ற நளவேந்தனது, மாசரிதம் - பெருமைமிக்க வரலாற்றினை, கூற - பாடுதற்கு (சொல்வதற்கு), அரும்துணைஆம் - சிறந்த துணையாக முன்னின்றருள் புரியும். (ஆதலால் அவைகளை வணங்குவாம்)

(கருத்து) நளன் சரிதம்கூறப் பிள்ளையார் வடிகள் துணையாகும்.