(விளக்க உரை) நேசராவார் அரசனுக்கு
மந்திரக்கிழமை பூண்ட அமைச்சரும் படைத்தலைவர் முதலியோரும்
குடிமக்களுமாவர். அரசன் அவர்கட்கு நலஞ்செய்து
பாதுகாக்கவேண்டும் கடப்பாடுடையனாகலான், ‘இதங்கூர’
என்றார்.
நிலவலயம் - பூமியாகிய வட்டம். இது
இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இடவாகு பெயராய் நாட்டில்
வாழும் மக்களை உணர்த்திற்று; ‘ஊரடங்குகிற்று’
என்பதுபோல. மா - பெருமை. பலபொருள் குறித்த உரிச்சொல்.
சரிதம் - வரலாறு. ‘ஆம்’ என்பதிலுள்ள மகரம் குறைந்து
‘ஆ’ என நின்றது, கடைக்குறை விகாரம். ஈசன் - எல்லாச்
செல்வமும் உடையான் ; அஃது, ஈண்டுச் சிவபெருமானைக்
குறித்தது. கரியான்-கருமை என்னும் பண்படியாகப் பிறந்த
பெயர். கருநிறமுடையான் என்பது பொருள். கருநிறமுடைய
இந்திரன், மன்மதன் முதலியோரைக் குறிக்குமாயினும்
சிறப்புப்பற்றித் திருமாலைக் குறித்தது. காரண
இடுகுறிப்பெயர். அனத்தான் - அன்னப்பறவையை ஊர்தியாகக்
கொண்டோன். ஆனதால் நான்முகனைச் சுட்டிற்று. அனம்
- அன்னம்; இடைக்குறை விகாரம். கருதுதல் - எண்ணுதல்.
அஃதாவது தம்மினும் உயர்வாக நினைத்தல். புகழ்-சிறப்பித்துப்
பிறரால் கூறப்படும் உயர்சொல்; இறவாதபுகழ்.
இதனைப் ‘பொருள்சேர் புகழ்’ என்பர், வள்ளுவர்பெருமான்.
கரி - யானை. ஆனனம் - முகம். கரி - கருமை நிறமுடையது
என்னும் பொருட்டாய் யானைக்கு ஆயிற்று ; இகரம் உரிமைப்பொருள்
உணர்த்தும் விகுதி. அல்லது கருமை-பெருமை யெனக்கொண்டு
உருவிற் பெரிதாகிய யானையை உணர்த்திற்று என்று
கோடலுமாம். ‘ஈசன் கரியான் அனத்தான்’ எண்ணும்மைத்
தொகை. பூண்ட - இறந்தகாலப் பெயரெச்சம் ; கரியான்
என்னும் பெயர் கொண்டு முடிந்தது. கழல் - காலிலணியும்
வீரக்கழல். அஃது ஈண்டுத் தானியாகுபெயராய்த் திருவடிகளைக்
குறித்தது. ‘ஈசன், கரியான், அனத்தான், கரி ஆனனத்தான’
- சிவன், திருமால், நான்முகன், யானைமுகன் ஆகிய நான்கு
கடவுளர்தம், கழல்கள் இந்நூலை ஆக்குதற்கு அரிய துணையாகும்
என்று பொருள் கொள்ளலுமாம். கழல் துணையாகும். ஆதலால்
அவைகளை வணங்குவோம் என்பது குறிப்பெச்சம். நேசரிதம்,
மாசரிதம் என்பன முதல் மடக்குத் திரிபும், கரியானனத்தான்,
கரியானனத்தான் என்பன அடிமுதல் மடக்கும்
ஆகிய சொல்லணிகள். வருந்துணையா - துணையாவரும்
என மாற்றித், துணையாகவரும் என்று
பொருளுரைத்தலுமாம். (1)
|