தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நளமன்னன் வரலாற்றுச் சுருக்கம்

ஒருநாள் இரவில் காட்டகத்து நள்ளிரவில் ஓர் பாழ் மண்டபத்தே நளனும் தமயந்தியும் உறங்கினர் ; நளன் விழித்தெழுந்தான்; கலியின் வலியால் அக்காட்டில் தன்னந்தனியாகத் தமயந்தியைவிட்டுவிட்டு நீங்கினான். உறக்கம் நீங்கியெழுந்த தமயந்தி நளனைக் காணாது வருந்திப்புலம்பி வணிகனொருவன் உதவியால் சேதிநாடு சேர்ந்து, அங்குநின்றும் விதர்ப்பநாடு சென்று தன் தந்தை வீமனைக்கொண்டு தூதுவன்மூலம் நளனைநாட விட்டனள். இவளின் செய்தி இவ்வாறாக, பிரிந்துசென்ற நளன், காட்டில் தீ வாய்ப்பட்டு வருந்திய கார்க்கோடகனென்னும் பாம்பரசனை எடுத்துப் புறத்தேவிட்டு, அவானல் கடியுண்டு உருவம் கறுத்தனன். தன் பழைய உருவம் பெற நினைந்தால் உடுத்துக்கொள்ளும்படி அக்கார்ககோடகனால் கொடுத்த ஆடைகள் இரண்டைப் பெற்றுக்கொண்டு அயோத்திசென்று, அந்நகர் மன்னன் இருதுபன்னன்பால் மடைத்தொழிலும், தேர்த்தொழிலும் செய்யும் பணிஞனாக வாகுகனென்னும் பெயருடன் அமர்ந்திருந்தான்.

நளனைத் தேடவிடுத்த தூதுவனான அந்தணனொருவன், இவன் அங்கிருத்தலை உய்த்துணர்ந்துவந்து தமயந்திக்கு அறிவித்தனன். அவன் ‘தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நிகழ்’ வதாக இருதுபன்னனுக்கு மணவோலை போக்குவிக்க, அவன் வாகுகனென்னும் பெயரமைந்த நளனால் தேரோட்டிக்கொண்டு வந்து குண்டினபுர நகரையெய்தினன்.

இவ்விருவர் வருகை கண்ட தமயந்தி, தேரோட்டிபால் தன் மக்களை அனுப்பி நிகழ்ந்ததைத் தோழி மூலம் அறிந்து, தன் தந்தையுடன் வாகுகனிடம் சென்று உண்மையுருவைக் காட்டும் படி வேண்டினள் ; வாகுகன் உருமாறி நளமன்னனாகத் தோன்றினான்.

அப்பால் நளவேந்தன் தன் மனைவி மக்களுடன் படைகள் புடைசூழ நிடதநாடு சென்று, தன் மாவிந்தநகரம்புக்குப் புட்கரனோடு மறு சூதாடி வென்று, தன் நாடு நகர் முதலிய செல்வங்களை யெல்லாம் கைப்பற்றி, முடிசூடி, மன்னர் மன்னனாகக் கொடுங்கோலஞ்சிக் குடிபுரவுண்டு இனிது வாழ்ந்திருந்தனன்.

______


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:43:56(இந்திய நேரம்)