தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நளமன்னன் வரலாற்றுச் சுருக்கம்


நளமன்னன் வரலாற்றுச் சுருக்கம்

நிடதநாட்டு வேந்தனாகிய நளன், குடிகளை நன்கு புரந்து கோல்முறை கோடாது ஆட்சிபுரிந்தனன்; அவன் வேனிற்காலத்தே ஒருநாள் சோலைவளங் காணச் சென்றான். ஆங்கோர் அன்னப்புள் தோன்றிற்று ; அஃது அவணுள்ள தடாகமொன்றில் வாழ்ந்துவந்தது. அதன் அழகை வியந்து கைப்பற்றினான். அது அரசனைக்கண்டு ‘தன்னைக் கொன்றுவிடுவானோ?’ என்று கருதி, அஞ்சி, வாடியது ; மன்னன் அதன் அழகை வியந்து களித்துக் கைப்பிடியினின்று அதனை வெளிச்செல்ல விட்டனன். அன்னம் பறந்து சென்றது ; ஏதோ கருதி நளன்பால் மீண்டு வந்தது. அது, ‘வேந்தே ! உனக்கு ஓர் நலஞ்செய்யக் கருதியுள்ளேன் ; அது நின் அழகுக்கேற்ற ஆரணங்கொருத்தியை நின்தோளுக்கிசைய மணம்புணர்விப்பதே ஆகும். அவ்வாரணங்கு, வீமன்குலத்துக்கு ஓர் மெய்தீபம் ; அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் ; அவள் தமயந்தி யென்னும் பெயரினாள்’ எனச்சாற்றியது. அன்னங்கூறிய உரையால் அவள்பாற் காதல்கொண்டு அவ்வன்னத்தைத் தமயந்திபால் தூதாக அனுப்பினான். அது தமயந்தி பாற்சென்று அவள் உடன்பாடு பெற்றுவந்து கூறிற்று. பின் சுயம்வரம் நிகழ்ந்தது. இந்திரன், வருணன், இயமன், அக்கினி முதலிய தேவர்களும் தமயந்தியை மணத்திற்கு நளனுருக்கொண்டு அச் சுயம்வரம் மண்டபத்தில் வீற்றிருந்தனர் ; மண்ணுலக வேந்தர்கள் யாவரும் கடரெனத்திரண்டு வந்திருந்தனர். ஆயினும் தமயந்தி நளமன்னனுக்கே மாலைசூட்டி மணவாளனாகக் கொண்டு மகிழ்ந்தனள்.

இந்திரன் முதலிய தேவர்கள் திரும்பிச் செல்லுங்கால் வழியில் கலிமகன் எதிர்ப்பட்டனன் ; அவனிடம் திருமண நிகழ்ச்சியை உரைத்தனர் ; அதுகேட்ட கலி சினங்கொண்டான். உடனே அவன், ‘நளனைக் கீழ்மைப்படுத்துகின்றேன் ; தமயந்தியையும் அவனைவிட்டுப் பிரிக்கின்றேன்’ என்று சூளுரை செய்தான். பின்னர்ச்சில்லாண்டுகள் கழிந்தன ; கலி, காலம் பார்த்திருந்தான்; புட்கரண் என்னும் மன்னனை நளனொடு சூதாட ஏவினான்; நளன் சூதாடித் தன் நாடு நகர் முதலிய அரசச் செல்வமெல்லாம் பணையமாக வைத்துத்தோற்றான். அப்பால் தன் மக்கள் இருவரையும் தன் மனைவி பிறந்த குண்டினபுரத்துக்குத் தன் மாமன் வீமனிடம் சேர்ப்பிக்கச்செய்து, தான் மனைவியோடு நாட்டினின்றும் நீங்கித் தீக்கானகம் சென்று ஆங்கே உறைந்து வருவானானான்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:43:46(இந்திய நேரம்)