தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


புகழேந்திப்புலவர் வரலாற்றுச் சுருக்கம்

கல்வி கேள்விகளிற் சிறந்து பாண்டி மன்னன் பேரவையை அணிசெய்த பேரறிஞர்களுள், இவர் தலைமணியாகத் திகழ்ந்தாரென அறிஞர் கூறுவர். இவ்வாறு இவர் பாண்டியமன்னன் பேரவையில் தலைமை சான்ற புலமையாளராக விளங்கியிருக்குங்கால், குலோத்துங்கசோழன் பேரவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், சோழமன்னனுக்குப் பெண்கோடற்குப் பாண்டியன்பால் வந்து பெண் கேட்டகாலைப் புகழேந்தியாருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் வாக்குவாதம் நிகழ, இருவரும் தம்தம் அறிவின் ஆற்றலைக் காட்டினரென்றும், அதனால் ஒட்டக்கூத்தர் புகழேந்தியாரின் ஆற்றலுக்கு ஆற்றாதுபோயினரென்றும் பண்டுதொட்டு வரலாறாக ஆன்றோர் கூறுவர். பின்னர்ப் பாண்டியன் புதல்வியைச் சோழமன்னனுக்கு மணம்புணர்த்தினர்; அதற்கு மகட்கொடை (சீதனம்) ஆகக் கொடுத்த பொருள்களுடன், புகழ்ந்தியாரையும் விடுத்தனன் எனவும், ஏற்கெனவே நிகழ்ந்த உரையாடலினால் மனவயிரங்கொண்ட ஒட்டக்கூத்தர், இவரைச் சிறைப்படுத்தினர் எனவும், அது காலையே ‘அல்லியரசாணி மாலை,’ ‘பஞ்சபாண்டவர் வனவாசம்,’ போன்ற அம்மானை நூல்கள் பாடினாரென்றும் கூறுவர். ஆனால், அதை உண்மையென்று கோடற்குரிய அகச்சான்று புறச்சான்றுகள் யாதுமின்று. அறிஞருலகு உண்மை கண்டுணர்க. அதனால் வருந்திய புகழேந்தியார் தன்மையை அரசி தெரிந்து சிறையினின்றும் அரசனால் விடுவிக்கச் செய்தாளெனவும், அப்பால் சந்திரன் சுவர்க்கி மன்னன் ஆதரவினால் தம் வாழ்க்கையை இனிது நிகழ்த்தினரென்றும், அம்மன்னன் வேண்டுகோட்கிணங்கியே இந்நூலை ஆக்கி உதவினாரென்றும் கூறுப. அதற்கு அகச்சான்றாக இந்நூலகத்துச் சந்திரன் சுவர்க்கியின் புகழ் கூறப்பெறுதலால் அறியலாம்.

இந்நளவெண்பா நூலுக்கு முதல் நூல் வடமொழி மகாபாரதத்தில் ஆரணிய பரவத்தின்கண் வரும் ‘நளோ பாக்கியாநம்’ ஆகும். எனவே, நந்தமிழகமாந்தர் நளமன்னன் வரலாற்றை உணர்ந்து கோடற்கு அதன் கிளைக்கதையாகக்கொண்டு முதல்பாவாகிய வெண்பாவினால் ஆக்கித்தந்தனர். இதனால் மக்கள் அறமும் அன்பும் பண்பும் உடையராய்க் காவியப்புண்பு கண்டு இன்புறும் நீரராய் வாழ, வழிவகுத்துத்தந்த வள்ளுலுமாவர். இவர் புகழ் என்றும் நின்று நிலவ இந்நூலைப்போற்றிக் கற்றலே புலவர் பெருமகனார்க்கு ஆற்றும் கடப்பாடாகும். புகழேந்தியார் புகழ் சிறப்பதாக.

______



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:43:36(இந்திய நேரம்)