பக்கம் எண் :

18நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(இ - ள்.) பூதலத்தும் மீதலத்தும் வாக்கில் நேர் இல்லாத மன் - மண்ணுலகினும் விண்ணுலகினும் வாய்மையே உரைப்பதில் தனக்கு யாரும் ஒப்பில்லாத தருமராசன், அம் பொன் கயிலைக்கே - அழகிய வெள்ளிமலையில் எழுந்தருளி யிருக்கின்ற, ஆகத்து அரவு அணிவார்தம் பொன்படைக்கு - மார்பில் பாம்பை அணியாகப் பூண்ட சிவபெருமானின் பொன்னொளியுள்ள பாசுபதாத்திரப் படையைப் பெற்றுக்கொண்டு வருமாறு, தமியன் ஆ - தன்னந்தனியனாக, எம்பியை முன் போக்கினேன் என்று உரைத்தான் - என் தம்பியாகிய (அருச்சுனனை நெடுநாட்களுக்கு) முன்பாகவே செல்ல விடுத்தேன் என்றான்.

(க - து.) ‘பாசுபதாத்திரப் படை பெறுதற்கு அருச்சுனனைக் கைலைமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்பால் அனுப்பி நெடுநாட்கள் ஆயின’ என்று தருமன் கூறினான்.

(வி - ரை.) ‘பொன் கயிலை’ என்பது ஈண்டு வெண்பொன்னாகிய வெள்ளியைக் குறித்தது. ஒன்றொழி பொதுச்சொல். பொன்படை - அழகிய படை என்றலுமாம். ‘ஆக’ என்பதன் ஈற்றுக் ‘ககர உயிர்மெய்’ கெட்டு ‘ஆ’ என வந்தது விகாரம். மன் - நிலைபேறுடையவன் என்பது பொருள். (6)

‘ அருச்சுனன் மிக்க தோள்வலியுடையான் ’ என்று
வியாசர் கூறல்

14. காண்டா வனம்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டும் அன்றோ துணை.

(இ - ள்.) காண்டா வனம் தீ கடவுள் உ(ண்)ண - காண்டாவனத்தைத் தீக்கடவுள் (அக்கினி பகவான்) எரித்துக் கொளுத்துமாறு, கைகணையால் நீண்ட முகில் தடுத்து நின்றான்கு - தன்கையம்புகளினால் விரிந்து மூடிய மேகங்களை (மழைபெய்ய வொண்ணாமல்) தடுத்து வெற்றியுற்று வந்த அருச்சுனனுக்க, அமரர் மீண்டும் தாள் இரண்டும் நோவ தனி தனியே ஓடிய நாள் - தேவர்கள் புறமுதுகுகாட்டி தம்தம் கால்கள் இரண்டும் நோவும் வண்ணம் தனித்தனியாகப் பிரிவுபட்டு ஓட்டமெடுத்தபோது, தோள் இரண்டும் அன்றோ துணை - அவனுக்குத் தன் தோள்கள் இரண்டுமன்றோ உதவியாக இருந்தன? (ஆதலால் அத்தகையானைக் குறித்து நீ வருந்தவேண்டா.)